2000 கோடி வசூல்: இமாலய சாதனை நிகழ்த்தியது ‘தங்கல்’
உலகளவில் 2000 கோடி வசூலைக் கடந்து ஆமீர்கான் நடிப்பில் வெளியான ‘தங்கல்’ இமாலய சாதனையை படைத்துள்ளது.
நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ஆமிர்கான் நடிப்பில் வெளியான படம் ‘தங்கல்’. 2016-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலக நாடுகளிலும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வந்தது ‘தங்கல்’.
மே மாதம் 5-ஆம் தேதி ‘தங்கல்’ சீனாவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. வெளியான நாள் முதல் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வந்தது. சீனாவில் மட்டும் சுமார் 1000 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. சீன சினிமா வரலாற்றில் இந்த சாதனையை செய்யும் 33-வது திரைப்படம் ‘தங்கல்’ என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சீனாவில் பல்வேறு திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. சீனாவில் 53-வது நாளன்று 2.5 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதன் மூலமாக உலகளாவிய வசூலில் சுமார் 2000 கோடியை கடந்துள்ளது ‘தங்கல்’ திரைப்படம். இச்சாதனையை எட்டிய முதல் இந்திய திரைப்படம் என்ற இமாலய சாதனையையும் படைத்தது.
உலக திரையுலக வரலாற்றில், ஆங்கில திரைப்படங்கள் தவிர்த்து அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் 5-வது இடம், 2017-ம் ஆண்டில் வெளியாகி அதிக வசூல் செய்த விளையாட்டை மையப்படுத்திய திரைப்படம் உள்ளிட்ட சாதனைகளை படைத்துள்ளது.
சீன பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் அதிக வசூல் செய்த 16 படங்கள் பட்டியலில், ஹாலிவுட் படங்கள் தவிர்த்து இடம்பெற்றிருக்கும் ஒரே படம் ‘தங்கல்’ என்பது குறிப்பிடத்தக்கது.