இன்று நள்ளிரவு பிரதமர் தலைமையில் ஜிஎஸ்டி அறிமுக விழா
நாடு முழுவதும் நாளை (ஜூலை 1) முதல் அமலுக்கு வரவுள்ள ஜி.எஸ்.டி.,க்கான தொடக்க விழா பிரதமர் மோடி தலைமையில் பார்லி., வளாகத்தில் இன்றிரவு (ஜூன் 30) நடைபெறுகிறது.
பார்லி., மைய மண்டபத்தில், இன்றிரவு 11 மணியளவில் இவ்விழா நடைபெறுகிறது. இதில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் உரையாற்ற உள்ளனர். லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவேகவுடா மற்றும் அனைத்து எம்.பி.,க்கள், மாநில நிதியமைச்சர்கள் மற்றும் ஜி.எஸ்.டி கவுன்சில் உறுப்பினர்கள் இவ்விழாவில் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்துகிறார். தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர் ஜெயகுமார் பங்கேற்பார் என கூறப்படுகிறது.
இவர்கள் தவிர, அனைத்து மாநில முதல்வர்கள், நடிகர் அமிதாப் பச்சன், பாடகி லதா மங்கேஷ்கர், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல், இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி உள்ளிட்டோருக்கும் மத்திய அரசு சார்பில் அழைத்து விடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஜி.எஸ்.டி தொடக்க விழாவை புறக்கணிக்கப் போவதாக, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளன.