Breaking News
6 முஸ்லிம் நாடுகளுக்கு விசா : அமெரிக்கா புதிய கட்டுப்பாடு

ஈரான், லிபியா உள்ளிட்ட ஆறு முஸ்லிம் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு, புதிய, ‘விசா’ கட்டுப்பாடுகளை, அமெரிக்க அரசு விதித்துள்ளது.
அமெரிக்க அதிபராக, ஜனவரியில் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், சிரியா, சூடான், சோமாலியா, லிபியா, ஈரான், ஏமன் ஆகிய ஆறு நாடுகளிலிருந்து, அகதிகள் மற்றும் பயணியர், அமெரிக்காவுக்கு வர தடை விதித்தார்; இதற்கு, அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அதிபர் டிரம்பின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்து, அந்நாட்டு கோர்ட்டுகள் உத்தரவிட்டன. இந்நிலையில், ஆறு முஸ்லிம் நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்க, புதிய கட்டுப்பாடுகளை, அமெரிக்க அரசு, நேற்று பிறப்பித்தது.
இது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளதாவது: ஈரான், லிபியா, ஏமன் உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வருவதற்காக, விசா கோரி விண்ணப்பிப்பவர்கள், தங்கள் நெருங்கிய உறவினர்கள் அமெரிக்காவில் வசிப்பதற்கான ஆதாரங்களை அவசியம் அளிக்க வேண்டும். அமெரிக்காவில் வசிக்கும் உறவினர், மகன், மகள், தந்தை, மாமா, தாத்தா பேரன் போன்ற ரத்த உறவினர்களாக இருப்பது மிக அவசியம்; அதற்கான ஆவணங்களை, விசா விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
தொழில் ரீதியாக அமெரிக்காவிற்கு வருபவர்கள், அதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். தொழில் தொடர்பான விபரங்கள், தொடர்பு கொள்ளும் நபர், அவரது தொழில் பின்னணி உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே, ஆறு நாடுகளை சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க துாதரகம் இதனை உறுதி செய்து விண்ணப்பத்தை ஏற்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.