விம்பிள்டன் டென்னிஸ் போட்டி டிரா வெளியீடு: அரை இறுதி சுற்றுகளில் ஆன்டி முர்ரே- நடால், பெடரர்- ஜோகோவிச் மோத வாய்ப்பு
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மிகவும் புகழ் பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வரும் 3-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை லண்டனில் நடைபெறுகிறது. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மிகப் பெரிய கவுரவமாக கருதப்படும் இந்த தொடரில் டென்னிஸ் அரங்கின் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல போராடத் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போட்டிக் கான டிரா நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும் நம்பர் ஒன் வீரருமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, இருமுறை சாம்பியனும் 2-ம் நிலை வீரருமான ஸ்பெயினின் ரபேல் நடாலுடன் அரை இறுதியில் மோத வாய்ப்புள்ளது.
இதேபோல் மற்றொரு அரை இறுதியில் 8-வது முறையாக விம்பிள்டன் பட்டத்துக்கு குறிவைத்துள்ள 5-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 3 முறை சாம்பியனும் 4-ம் நிலை வீரருமான செர்பி யாவின் ஜோகோவிச்சுடன் மோதக் கூடும்.
விம்பிள்டன் போட்டித் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் ஆன்டி முர்ரே தனது முதல் சுற்றில் போட்டியின் தொடக்க நாளான 3-ம் தேதி தகுதி நிலை வீரருடன் மோதுகிறார். அதேவேளையில் போட்டித் தரவரிசையில் 2-ம் இடம் வகிக்கும் ஜோகோவிச், 44-ம் நிலை வீரரான சுலோவேக்கியாவின் மார்ட்டின் கிளிஸானை தனது முதல் சுற்றில் சந்திக்கிறார்.
ஜோகோவிச் தனது 3-வது சுற்றில் பழைய பரமவைரியான அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல்போர்டோவுடன் மோத வாய்ப்புள்ளது. போட்டித் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் ரோஜர் பெடரர் தனது முதல் சுற்றில் உக்ரைனின் அலெக்சாண்டர் டோல்கோபோலோவையும், 4-ம் நிலை வீரரும் 10-வது முறையாக பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்றவருமான நடால் தனது முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் ஜான் மில்மானுடனும் மோதுகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியில் ஆன்டி முர்ரே முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி யடைந்திருந்தார். இந்நிலையில் அவருக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விம்பிள்டன் போட்டி தொடங்க இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் கடைசி பயிற்சி ஆட்டமாக ஹர்லிங்காம் நகரில் நேற்று நடைபெற இருந்த கண்காட்சி டென்னிஸ் போட்டியில் முர்ரே பங்கேற்பதாக இருந்தது. ஆனால் காயம் காரணமாக அவர் இதில் கலந்துகொள்ளவில்லை.
இதனால் விம்பிள்டன் தொடரில் முர்ரே சிறந்த திறனை வெளிப்படுத்த முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. முர்ரே தனது 2-வது மற்றும் 3-வது சுற்றுகளில் போர்ச்சுக்கல்லின் ஜோவோ சோசாவையும், ஜெர்மனியின் டஸ்டின் பிரவுனையும் எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
இதில் 94-ம் நிலை வீரரான டஸ்டின் பிரவுன் கடந்த 2015-ம் ஆண்டு விம்பிள்டன் தொடரில் ரபேல் நடாலை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் முர்ரே, 15-ம் நிலை வீரரான பிரான்சின் லூக்காஸ் பவுலியையும், ஜோகோவிச், 16-ம் நிலை வீரரான பிரான்சின் மோன்பில்ஸையும் சந்திக்க வாய்ப்புள்ளது.
விம்பிள்டன் தொடரின் முதல் வாரத்தில் ஜோகோவிச் – டெல்போர்ட்டோ (இருவரும் 3-வது சுற்றுக்கு முன்னேறினால் மட்டுமே) மோதும் ஆட்டம் சிறப்பம்சமாக விளங்கக்கூடும். 2013-ம் ஆண்டு விம்பிள்டன் அரை இறுதியில் 5 செட்கள் வரை போராடி டெல்போர்ட்டோவை வீழ்த்தியிருந்தார் ஜோகோவிச். அதேவேளையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை பந்தாடி பதக்கம் வென்றார் டெல் போர்ட்டோ. இதனால் இவர்கள் மோதும் ஆட்டம் இம்முறையும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக் கிறது.
பெடரர், கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் 11-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவையும், கால் இறுதியில் கனடாவின் மிலோஸ் ரயோனிச் அல்லது ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரெவ் உடன் மோத அதிக வாய்ப்புகள் உள்ளது.
இவர்களில் கடந்த வாரம் நடைபெற்ற ஹாலே டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அலெக்சாண்டர் ஜிவெரெவை வீழ்த்தி பெடரர் கோப்பையை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடால், தனது கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் 26-ம் நிலை வீரரான லக்ஸம்பர்க்கின் கில்லஸ் முல்லருடனும், கால் இறுதியில் ஜப்பானின் நிஷி கோரி அல்லது அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியன் மரின் சிலிச்சுடன் மோதக்கூடும்.
இறுதிப் போட்டியில் ரபேல் நடால், ரோஜர் பெடரர் மோத வாய்ப்புகள் உள்ளதாகவும் கருதப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கெனவே 2006, 2007, 2008 விம்பிடன் இறுதிப் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளனர். 2008-ல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெடரருடன் சுமார் 5 மணி நேரம் போராடி நடால் பட்டம் வென்றிருந்தார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இந்த ஆட்டம் மிகச்சிறப்பு வாய்ந்ததா கவும் அமைந்திருந்தது.
மகளிர் பிரிவு
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், முன்னாள் சாம்பியன் மரியா ஷரபோவா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இதனால் மகளிர் பிரிவில் பட்டம் வெல்வதற்கான வாய்ப்புகள் திறந்த நிலையிலேயே உள்ளதாகக் கருதப்படுகிறது.
முதல் நிலை வீராங்கனையும் கடந்த ஆண்டு விம்பிள்டனில் 2-வது இடத்தைப் பிடித்தவருமான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் இம்முறை கால் இறுதியில் ரஷ்யாவின் சுவெட்லனா குஸ்நெட் சோவா எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது. குஸ்நெட்சோவா பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
2-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப், இங்கிலாந்தின் ஜோஹன்னா கோண்டாவுடன் கால் இறுதியில் மோதக்கூடும். இதற்கிடையே ஜோஹன்னா கோண்டா காயத்தால் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈஸ்ட்போர்ன் டென்னிஸ் போட்டி தொடரின் அரை இறுதி யில் விளையாட இருந்த அவர், முதுகெலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளார். இதனால் அவர் விம்பிள்டன் தொடரில் பங்கேற்பாரா என்பதில் சந்தேகம் வலுத்துள்ளது.
7-ம் நிலை வீராங்கனையான ஜோஹன்னா கோண்டா ஈஸ்ட்போர்ன் டென்னிஸ் தொடரின் கால் இறுதியில் முதல் நிலை வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பரை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விம்பிள்டன் தொடரின் மகளிர் பிரிவு மற்ற கால் இறுதி ஆட்டங்களில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, டென் மார்க்கின் கரோலின் வோஸ்னி யாக்கியுடனும், உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா, சுலோ வேக்கியாவின் டொமினிகா ஷிபுல் கோவாவுடனும் மோத வாய்ப்புகள் உள்ளது.
5 முறை சாம்பியான அமெரிக் காவின் வீனஸ் வில்லியம்ஸ் தனது முதல் சுற்றில் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்சை சந்திக்கிறார். பெல்ஜியத்தின் விக்டோரியா அசரன்கா, அமெரிக்காவின் சிசி பெலிசையும், செக் குடியரசின் பெட்ரா விட்டோவா, சுவீடனின் ஜோகன்னா லார்சனையும் தங்களது முதல் சுற்றில் எதிர்கொள்கின் றனர்.