சென்னையின் எப்சி அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் சென்னையின் எப்சி அணியின் பயிற்சியாளரான மார்க்கோ மெட்டராஸி விலகியதைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளராக ஜான் கிரகோரி நியமிக்கப்பட்டுள்ளார்.
63 வயதான ஜான் கிரகோரி இங்கிலாந்து தேசிய அணிக்காக 6 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். போர்ட்ஸ்மவுத் கிளப் அணியில் தனது பயிற்சியாளர் பயணத்தை தொடங்கினார். இதன் பின்னர் பிளைமவுத் ஆர்கில், வைகாம்போ வாண்டரர்ஸ் ஆகிய அணிகளுக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில் இங்கிலீஸ் பிரீமியர் லீக்கில் ஆஸ்டன் வில்லா அணிக்கு 4 ஆண்டுகளாக பயிற்சி அளித்துள்ளார்.
இவரது பயிற்சியின் கீழ் விளையாடிய ஆஸ்டன் வில்லா அணி கடந்த 2000-ம் ஆண்டில் நடைபெற்ற எப்.ஏ. கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்திருந்தது. 2002-ம் ஆண்டு ஆஸ்டன் வில்லா அணியில் இருந்து விலகி டெர்பி கவுன்டி மற்றும் குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார்.
இதைத் தொடர்ந்து இஸ்ரேல், கஜகஸ்தான் நாட்டில் உள்ள கிளப் அணிகளிலும் பயிற்சியாளராக பணியாற்றிய கிரகோரி, கடைசியாக இங்கிலாந்தில் உள்ள கிராலி டவுன் அணியின் மேலாளராக செயல்பட்டார்.
கிரகோரி கூறும்போது, “சென்னையின் எப்சி அணியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய அணியின் உரிமையாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஐஎஸ்எல் தொடரில் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தி வரும் அணிகளில் சென்னையின் எப்சி அணியும் ஒன்று. முதல் 3 சீசன்களிலும் சிறப்பாக செயல்பட்ட மார்க்கோ மெட்டராஸியின் பணியை நான் தொடர விரும்புகிறேன்” என்றார்.
சென்னையின் எப்சி அணியின் இணை உரிமையாளரான விடா தானி கூறும்போது, “ஜான் கிரகோரியை தலைமை பயிற்சியாளராக நியமித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வீரராகவும், பயிற்சியாளராகவும் அவருக்கு உயர்ந்த மட்டத்தில் சிறந்த அனுபவம் உள்ளது. அவரது பார்வை, ஆளுமை எங்களது அணியின் தத்துவம், நோக்கத்துடன் பொருந்திச் செல்கிறது. கிரகோரியின் வழி காட்டுதலில் இந்த சீசனை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்” என்றார்.