ஜோகோவிச் விம்பிள்டன் பட்டம் வென்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை: ஆந்த்ரே அகாஸி
செர்பிய நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் தனது 4-வது விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பட்டம் வென்றால் யாரும் ஆச்சரியப்பட மாட்டார்கள் என்று பயிற்சியாளர் ஆந்த்ரே அகாஸி கூறியுள்ளார்.
சமீப காலமாக நிறைய தோல்விகளைச் சந்தித்து வரும் ஜோகோவிச் ஒற்றையர் தரவரிசையில் 4-ம் இடத்துக்கு பின்னடைவு கண்டார். ஈகான் சர்வதேச டென்னிஸில் கடந்த சனிக்கிழமையன்று சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் இந்த ஆண்டில் வெல்லும் 2-வது பட்டமே.
இந்நிலையில் ஆந்த்ரே அகாஸி கூறும்போது, “ஆச்சரியப்பட வேண்டாம்! இவர் மீண்டும் கோப்பையை வெல்ல முடியுமா என்றால், ஆம் இவரால் முடியும் என்றே கூறுவேன், அதுதான் நோக்கம், திட்டம் எல்லாம். சிறப்பாகத் தயாரித்துக் கொண்டு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை நமக்குள் ஏற்படும் தனிப்பட்ட நம்பிக்கையாகும்.
குறிப்பிட்ட கனவுக்கு நம்பிக்கையூட்டும் போதுமான உத்வேகம் இருக்கிறது. நான் வந்த போது இருந்ததை விட ஜோகோவிச் இப்போது நல்ல முறையில் இருக்கிறார், ஜோகோவிச் என்னவாக அறியப்பட்டாரோ அதே சிறப்பான இடத்துக்கு அவரைக் கொண்டு செல்ல என்னாலான சாதனங்களை அவருக்கு வழங்கி வருகிறேன். பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நானே சில விஷயங்களை கற்றுக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார் அகாஸி.