நடிகை பாவனா மானபங்க வழக்கு நடிகர் திலீப்-நடிகை காவ்யா மாதவன் கைது ஆகிறார்கள்?
சித்திரம்பேசுதடி, ஜெயம்கொண்டான், வெயில், தீபாவளி உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் கதாநாயகியாக நடித்தவர், பாவனா. அவர், கடந்த பிப்ரவரி 17-ந் தேதி இரவு, ஒரு சினிமா படப்பிடிப்பை முடித்துக் கொண்டு காரில் திரும்பியபோது, ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, காரிலேயே மானபங்கப்படுத்தப்பட்டார்.
இதுதொடர்பாக, பல்சர் சுனில் என்பவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்விவகாரத்தில் திடீர் திருப்பமாக, பல்சர் சுனிலின் கூட்டாளி, தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக பிரபல மலையாள கதாநாயகன் திலீப், போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் செய்தார். அதன்பேரில், திலீப்பிடமும், அவருடைய மேலாளர் அப்புண்ணி, சினிமா இயக்குனர் நாதிர்ஷா ஆகியோரிடமும் போலீசார் சமீபத்தில் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, திலீப்- காவ்யா மாதவன் தம்பதிக்கு எதிரான ஆதாரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பாவனாவை பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவை காவ்யா மாதவன் நடத்தும் கடையில் வேலை செய்யும் ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக பல்சர் சுனில் ஒரு கடிதத்தில் தெரிவித்தான்.
அதன்பேரில், காக்கநாட்டில் உள்ள காவ்யா மாதவன் கடையில் போலீசார் சோதனை நடத்தினார்கள். வியாபார ஆவணங்களையும், வங்கி கணக்கு பரிமாற்ற விவரங்களையும் ஆய்வு செய்தனர்.
மேலும், பல்சர் சுனில், கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து பாவனாவை கடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை, அடிக்கடி தொடர்பு கொண்ட 4 தொலைபேசி எண்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். அந்த எண்ணுக்கு உரியவர்கள், திலீப் மேலாளருக்கு நெருக்கமானவர்கள் என்று போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும், சிறையில் இருந்தபடி, திலீப் மேலாளருடன் பல்சர் சுனில் 3 தடவை பேசி உள்ளான்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நடிகர் திலீப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பல்சர் சுனில் நிற்பது போன்ற புகைப்படங் கள் தற்போது டெலிவிஷன் சேனல்களில் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்கள், கடந்த நவம்பர் மாதம், திருச்சூரில் உள்ள ஒரு கிளப்பில் நடந்த ‘ஜார்ஜ்சேட்டன் பூரம்’ என்ற படப்பிடிப்பில் எடுக்கப்பட்டவை ஆகும்.
அந்த படங்களில், திலீப்பும், பல்சர் சுனிலும் ஒன்றாக தோன்றவில்லை. இருப்பினும், அவர்களுக்கிடையே அறிமுகம் இருப்பதை நிரூபிப்பதாக அவை அமைந்துள்ளன. இதனால், திலீப் படப்பிடிப்புகளில் எடுக்கப்பட்ட வேறு புகைப்படங்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
மேலும், பேனி பாலகிருஷ்ணன் என்ற வக்கீல், பல்சர் சுனிலுக்கு ஜாமீன் பெற்றுத் தரக்கோரி, 2 பேர் தன்னை வந்து சந்தித்ததாகவும், ‘மேடத்திடம் பேசி விட்டு மீண்டும் வருகிறோம்’ என்று கூறிச் சென்றதாகவும் போலீசில் தெரிவித்துள்ளார்.
அவர்கள் கூறிய ‘மேடம்’ யார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
நடிகர் திலீப், அவருடைய மேலாளர் அப்புண்ணி, இயக்குனர் நாதிர்ஷா ஆகியோரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவ்யா மாதவன், அவருடைய தாயார் ஆகியோரும் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளனர்.
அடுத்தடுத்து ஆதாரங்கள் வெளியாகி வரும் நிலையில், போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெகரா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், நடிகை பாவனா வழக்கில், முக்கியமான நபர்களை உடனடியாக கைது செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, விசாரணை குழு தலைவரான கூடுதல் டி.ஜி.பி. தினேந்திர காஷ்யப்பை கொச்சியிலேயே தங்கி இருக்குமாறு டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இதை உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனவே, நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவன் ஆகியோர் எந்த நேரமும் கைதாவார்கள் என்று தெரிகிறது.