ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பதவியுயர்வு பெற உடற்தகுதி கட்டாயம்
ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதிவி உயர்வு பெற உடற்தகுதியை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்கள், சி.ஆர்.பி.எப்., போலீசார், ஆகியோருக்கு பணி காலத்தில் உடற் தகுதி கட்டாயமாக்கப்பட்டு விதிமுறைகள் கடுமையாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் போலீஸ் உயர்திகாரிகள் பணியில் இருக்கும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பணியில் சேரும் போது மட்டும் உடற்தகுதி விதிமுறைகள் கட்டாயப்படுத்தப்படுகிறது. பணி காலத்தில் உடற்தகுதியில் கடுமையான விதிமுறைகளை கடைபிடிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லாத நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு கட்டாய உடற் தகுதி விதிமுறையை ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த விதிமுறைப்படி அனைத்து ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் பதவி உயர்வு பெறுவதற்கு குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளில் ‘சேப்-1’ உடற்தகுதி சான்றிதழ் பெறுவது கட்டாயமாகிறது.
சேப்-1 உடற்தகுதி என்பது உளவியல் ரீதியான உடல் தகுதி, காது கேட்கும் திறன், கண்பார்வை, உடல் உறுப்புகளின் பலம், ரத்த அழுத்தம், உள்ளிட்டவைகளை கொண்டு கணக்கிடப்படுகிறது.
இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டால், உடல் பருமன் மட்டுமல்லாமல், கேட்கும் திறன், பார்வை திறன் கோளாறு உடையவர்கள், ரத்த அழுத்தம், இதயகோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் தகுதியற்றவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காது. உயர் பதவியில் இருப்பவர்கள் முழு உடற்தகுதியுடன் இருந்தால் தான் சிறப்பாக செயலாற்ற முடியும் என்பதால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.