பெரும்பாக்கத்தில் ரூ.14 கோடியில் புதிய பேருந்து முனையம், பணிமனை: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
பெரும்பாக்கத்தில் ரூ.14 கோடியே 25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு போக்குவரத்துக்கழக பேருந்து முனையம் மற்றும் பணிமனையை முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
இதுகுறித்து நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு சட்டப்பேரவையில் 110-ம் விதியின் கீழ் போக்குவரத்துக்கழக பேருந்து சேவையை தொய்வின்றி வழங்க பணிமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கம், கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் ஆகிய இடங்களில் புதிய பணிமனைகள் கட்டப்படும் என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பை செயல் படுத்தும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கத்தில் குடிசை மாற்று வாரியத்தால் ரூ.14 கோடியே 25 லட்சம் செலவில் பேருந்து பணிமனையுடன் கூடிய பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டம் சூலூரில் போக்குவரத்துக்கழகம் சார்பில் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் பணிமனை கட்டப்பட்டுள்ளது. இவற்றை முதல்வர் கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
மேலும், 2017-18ம் கல்வி யாண்டில் ரூ.739 கோடியில் 27 லட்சத்து 5 ஆயிரத்து 160 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச கையடக்க பேருந்து பயண அட்டை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் 7 மாணவ, மாணவியருக்கு பயண அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், வீட்டு வசதித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், போக்குவரத் துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்துத்துறை செயலர் டேவிதார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.