வடகொரியாவுக்கு பதிலடி அமெரிக்க–தென்கொரிய ராணுவம் கூட்டாக ஏவுகணை சோதனை
கொரிய தீபகற்பத்தில் தென்கொரியாவுக்கு அச்சுறுத்தலாக திகழும் வடகொரியா தனது எல்லையில் படைகளை குவித்து வைத்திருப்பதுடன், அவ்வப்போது அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஐ.நா. விதித்த பல்வேறு தடைகளையும் மீறி வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் செயல்படுவதால் அமெரிக்காவின் கோபத்துக்கும் உள்ளாகி இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹூவாசாங்–14 என்னும் அதிநவீன ஏவுகணையை ஜப்பானின் கடல் பகுதியில் வடகொரியா வெற்றிகரமாக செலுத்தியது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணை 6,700 கி.மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கி அழிக்கும். அதாவது அமெரிக்காவையும் இந்த ஏவுகணையால் தாக்க முடியும். தனது நாட்டின் சுதந்திர தினத்தன்று இந்த சோதனை நடத்தப்பட்டதால் அமெரிக்கா சீற்றம் அடைந்தது.
வடகொரியாவின் நடவடிக்கைக்கு பதிலடி தரும் விதமாக தென்கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவம், தென்கொரியா ராணுவத்துடன் இணைந்து நேற்று அடுத்தடுத்து ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியது. தென்கொரியாவின் கடல் எல்லை பகுதிக்குள் நடத்தப்பட்ட இந்த சோதனையில் அமெரிக்காவின் எம்.ஜி.எம்.–140 ரக சாதுர்ய ஏவுகணைகள் மற்றும் தென்கொரியாவின் ஹைமோ ஏவுகணை–2 ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
அதே நேரம் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன், அமெரிக்காவை சீண்டும் விதமாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சுதந்திர தினத்தை(ஜூலை 4–ந்தேதி) கொண்டாடிய அமெரிக்க முட்டாள்களுக்கு அளிக்கப்பட்ட வெகுமதி ஆகும். அன்றைய நாள் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்காது என்று ஏளனமாக குறிப்பிட்டார்.
தனக்கு பக்கபலமாக வல்லரசு நாடான சீனா இருப்பதால் துணிந்து அமெரிக்காவை சீண்டும் வடகொரியாவுக்கு, டிரம்ப் நிர்வாகம் தக்க பாடம் புகட்டவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அமெரிக்க மக்களிடையே எழுந்து உள்ளது.