ஐநா:அணு ஆயுதங்களை தடை செய்ய 120 நாடுகள் தயார்
ஐநா சபையின் 120 நாடுகள் ஒன்று சேர்ந்து அணு ஆயுதங்களை தடை செய்யும் ஒப்பந்தத்தை ஏற்படுத்த தீர்மானம் நிறைவேற்றின.இந்த ஒப்பந்தத்தை விவாதித்து வந்த மாநாட்டின் தலைவரான கோமேஸ் முடிவுகளை அறிவித்தார். அணு ஆயுதமற்ற உலகை ஏற்படுத்த விதை விதைத்துள்ளோம்..இதன் மூலம் எங்கள் குழந்தைகள் அணு ஆயுதமற்ற உலகை வரித்துக்கொள்ளூம் சாத்தியம் ஏற்பட்டுள்ளது என்றார் கோமேஸ்.
70 ஆண்டுகள் காத்திருப்பு
இந்த சட்ட நெறிமுறைக்காக உலகம் 70 ஆண்டுகளாக காத்திருந்தது என்றார் கோமேஸ். உலகின் முதல் அணுகுண்டு இரண்டாம் உலகப்போரின் இறுதியில் 1945 ஆகஸ்ட் மாதம் ஹிரோஷிமா, நாகாசாகி மீது வீசப்பட்டதிலிருந்து இதற்காக காத்திருந்ததாக அவர் கூறினார்.ஹிரோஷிமாவில் முதல் அணுகுண்டு வீசப்பட்டப் போது 13 வயது ஆகியிருந்த செட்சுகோ துர்லோ என்பவர் அத்தாக்குதலிலிருந்து பிழைத்தவர்கள் இன்னொரு முறை எந்தவொரு மனிதர்களும் அத்தகைய அட்டூழியத்திற்கு ஆளாகக்கூடாது என்று வாழ்நாள் முழுதும் உழைத்ததாக கூறினார்.
ஆனால் இந்த ஒப்பந்தத்தை அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக அறியப்பட்டுள்ள ஒன்பது நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகியவை ஆதரிக்கவில்லை. அவற்றின் கூட்டணி நாடுகளும் இம்மாநாட்டில் பங்கேற்கவில்லை.