தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 458 ரன்கள் குவிப்பு
இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து தொடக்க நாளில் 5 விக்கெட்டுக்கு 357 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஜோ ரூட் 184 ரன்களுடனும், மொயீன் அலி 61 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 458 ரன்கள் குவித்து ஆல்–அவுட் ஆனது. கேப்டனாக அறிமுக இன்னிங்சிலேயே அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்ற ஜோ ரூட் 190 ரன்களில் கேட்ச் ஆனார். மொயீன் அலி தனது பங்குக்கு 87 ரன்களும், ஸ்டூவர்ட் பிராட் 57 ரன்களும் எடுத்தனர். தென்ஆப்பிரிக்க தரப்பில் மோர்னே மோர்கல் 4 விக்கெட்டுகளும், ரபடா, பிலாண்டர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி 38 ஓவர் முடிந்திருந்த போது புதுமுக வீரர் ஹெய்னோ குன் (1 ரன்), அம்லா (29 ரன்), பொறுப்பு கேப்டன் டீன் எல்கர் (54 ரன்), டுமினி (15) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களுடன் தடுமாறிக்கொண்டிருந்தது.