பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: அரைஇறுதியை உறுதி செய்யும் முனைப்பில் இந்தியா
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் அரைஇறுதியை உறுதி செய்யும் முனைப்புடன் இந்திய அணி இன்று தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
பெண்கள் உலக கோப்பை
இங்கிலாந்தில் நடந்து வரும் 8 அணிகள் இடையிலான பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. லீ செஸ்டரில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் 18–வது லீக்கில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, டேன் வான் நீகெர்க் தலைமையிலான தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை அணிகளை வரிசையாக பதம் பார்த்த இந்திய அணி 4 வெற்றிகளுடன் 2–வது இடத்தில் உள்ளது. தோல்வி பக்கமே செல்லாத இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடி அரைஇறுதியை உறுதி செய்யும் உத்வேகத்தில் இருக்கிறது.
அதே சமயம் 4 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை என்று 5 புள்ளியுடன் உள்ள தென்ஆப்பிரிக்காவுக்கு இது மிக முக்கியமான ஆட்டமாகும். இதில் தோற்றால் அரைஇறுதி வாய்ப்பு மங்கிப்போய் விடும். அதனால் வரிந்து கட்டி நிற்பார்கள். இவ்விரு அணிகளும் இதுவரை 15 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9–ல் இந்தியாவும், 5–ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆடிய 3 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி கண்டிருக்கிறது.
இந்திய வீராங்கனை பேட்டி
இந்திய வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தை எதிர்கொள்வதில் மிகுந்த நம்பிக்கையோடு உள்ளோம். ஏனெனில் கடைசியாக அந்த அணிக்கு எதிராக ஆடிய 5 ஆட்டங்களில் நாங்கள் நன்றாக ஆடினோம். கூட்டு முயற்சியாக திறனை வெளிப்படுத்துவதில் அவர்களை விட நாங்கள் தான் வலுவாக உள்ளோம். அந்த அணி குறிப்பிட்ட வீராங்கனைகளைத்தான் அதிகமாக சார்ந்து இருக்கிறது’ என்றார்.
தென்ஆப்பிரிக்க கேப்டன் வான் நீகெர்க் கூறும் போது, ‘முந்தைய இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் எங்களது பவுலர்கள் ரன்களை வாரி வழங்கி விட்டனர். இந்த ஆட்டத்தில் இன்னும் வலிமையாக கிளர்ந்தெழுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அடுத்த சில தினங்களில் அவர்கள் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதை காண்பதற்கு ஆவலாக இருக்கிறேன்’ என்றார். இதே மைதானத்தில் தான் தென்ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீசை 48 ரன்னில் சுருட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. டவுன்டானில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்–நியூசிலாந்து அணிகள் சந்திக்கின்றன.