லோதா கமிட்டி விவகாரம் இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
லோதா கமிட்டி சிபாரிசுகளின் படி இந்திய கிரிக்கெட் வாரிய (பி.சி.சி.ஐ.)நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டாலும், அதனை முழுமையாக அமல்படுத்தாமல் இந்திய கிரிக்கெட் வாரியம் காலம் தாழ்த்தி வருகிறது. இதற்கிடையில் லோதா கமிட்டி சிபாரிசை அமல்படுத்த கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் அப்போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த அனுராக் தாகூர் எம்.பி., சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் தன்னாட்சி உரிமை கொண்டதாகும். இதன் நடவடிக்கையில் கோர்ட்டு தலையிடுவது ஐ.சி.சி. விதிமுறைக்கு எதிரானதாகும். இதனை சுட்டிக்காட்டி கோர்ட்டில் தாக்கல் செய்ய கடிதம் தருமாறு ஐ.சி.சி.யை கேட்டு இருந்தார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் லோதா கமிட்டி சிபாரிசு தொடர்பாக நடந்து வரும் வழக்கு விசாரணையில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் அனுராத் தாகூர் இந்த தகவலை மறைத்து விட்டார். இது குறித்து விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அனுராக் தாகூரை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதுடன், அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது. இதனை அடுத்து அனுராக் தாகூர் மன்னிப்பு கேட்டு கோர்ட்டில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சந்திரசூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘அனுராக் தாகூர் தரப்பில் மன்னிப்பு கேட்டு முதலில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரம் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது. ‘தெளிவாகவும், ஆணித்தரமாகவும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி ஒரு பக்க அளவில் குறுகிய பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை வருகிற 14–ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். அன்றையை தினத்தில் அனுராக் தாகூர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்தனர்.