வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: விராட்கோலி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட்கோலி சதத்தால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
கடைசி ஒருநாள் கிரிக்கெட்
இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி, பேட்டிங்குக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தாலும், இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறினார்கள்.
206 ரன்கள் இலக்கு
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 51 ரன்னும், கைல் ஹோப் 46 ரன்னும், கேப்டன் ஜாசன் ஹோல்டர் 36 ரன்னும், ரோவ்மன் பவெல் 31 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டும், உமேஷ்யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஷிகர் தவான் 4 ரன்னில் அல்ஜாரி ஜோசப் பந்து வீச்சில் எவின் லீவிஸ்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
விராட்கோலி சதம்
இதைத்தொடர்ந்து கேப்டன் விராட்கோலி களம் கண்டார். கடந்த ஆட்டங்களில் ஷாட் பிட்ச் பந்து வீச்சில் விரைவில் விக்கெட்டை பறிகொடுத்த விராட்கோலி இந்த முறை ஷாட் பிட்ச் பந்துகளை திறம்பட கையாண்டார். அவரை முந்தைய ஆட்ட பாணியில் வீழ்த்த நினைத்த வெஸ்ட்இண்டீஸ் பந்து வீச்சாளர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. அணியின் ஸ்கோர் 84 ரன்னாக இருந்த போது தொடக்க ஆட்டக்காரர் ரஹானே 51 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் பிஷோ பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
அடுத்து தினேஷ்கார்த்திக், விராட்கோலியுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடி அணியை வெற்றியை நோக்கி வேகமாக அழைத்து சென்றனர். 67 பந்துகளில் அரை சதத்தை கடந்த விராட்கோலி 108 பந்துகளில் சதத்தை எட்டினார். ஒருநாள் போட்டியில் அவர் அடித்த 28–வது சதம் இதுவாகும்.
இந்திய அணி அபார வெற்றி
இந்திய அணி 36.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோஸ்டன் சேஸ் வீசிய பந்தை விராட்கோலி சிக்சருக்கு தூக்கி அணியை வெற்றி பெற வைத்தார். விராட்கோலி 115 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன் 111 ரன்னும், தினேஷ் கார்த்திக் 52 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 50 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 3–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 4–வது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. சதம் அடித்த விராட்கோலி ஆட்டநாயகன் விருதையும், மொத்தம் 336 ரன்கள் குவித்த ரஹானே தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
20 ஓவர் போட்டி
வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இந்திய அணி தொடர்ச்சியாக 7–வது முறையாக ஒருநாள் போட்டி தொடரை வென்றுள்ளது. இதில் வெஸ்ட்இண்டீஸ் மண்ணில் தொடர்ந்து 3 முறை (ஹாட்ரிக்) தொடரை வென்றதும் அடங்கும். இதனை அடுத்து இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிங்ஸ்டனில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
வெற்றிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘தொடரை வெல்வது தான் முதல் மற்றும் முன்னணி நோக்கமாகும். சாதனை முக்கியம் அல்ல. ஒரு அணியாக முழு நிறைவான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ரஹானே அருமையாக விளையாடினார். அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த இந்த வெற்றி திருப்தி அளிக்கிறது. அனைவரும் தங்களது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டனர். சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அணியில் களம் இறங்க வாய்ப்பு கிடைக்காத ரஹானே இந்த போட்டியில் வாய்ப்பு பெற்றதுடன் 336 ரன்கள் குவித்து அசத்தி இருக்கிறார். எனது பேட்டிங்கை அனுபவித்து விளையாட விரும்புகிறேன். மீண்டும் பார்முக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டோனி பந்தை அருமையாக அடித்து ஆடுகிறார். சூழ்நிலைக்கு தகுந்தபடியோ, இன்னிங்சை எப்படி வலுப்படுத்துவது என்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவருக்கு எதுவும் சொல்ல வேண்டிய தேவையில்லை. முந்தைய ஆட்டத்தில் அவரால் அடித்து விளையாட முடியாததற்கு ஆடுகளத்தில் பந்தின் வேகத்தன்மை கணிக்க முடியாத வகையில் இருந்ததே காரணமாகும். மற்றபடி அவரது ஆட்டத்தில் எந்தவித குறையும் இல்லை என்பதால் அவரது ‘பார்ம்’ குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் சிறப்பாக விளையாடினார். அதற்கு முந்தைய ஆட்டத்திலும் நன்றாக ஆடினார். ஒரு ஆட்டத்தை வைத்து பொறுமையின்றி ஒருவரை கணிக்கக்கூடாது. கடைசியில் களம் காணும் ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ் ஆகியோர் அதிரடியாக ஆடுவதை பார்க்கையில் பெருமிதமாக இருக்கிறது. இலக்கை எளிதாக எட்டிப்பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முகமது ஷமி பந்து வீச்சு அருமையாக இருந்தது’ என்று தெரிவித்தார்.
பேட்டிங் சரியில்லை
தோல்வி குறித்து வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் ஜாசன் ஹோல்டர் கருத்து தெரிவிக்கையில், ‘தொடக்கத்தில் நாங்கள் நன்றாகவே செயல்பட்டோம். கைல் ஹோப் அருமையாக ஆடினார். அவர் எதிர்பாராத நேரத்தில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு சரிவில் இருந்து எங்களால் மீள முடியவில்லை. ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தாலும் அதனை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. எங்களது பேட்ஸ்மேன்கள் 4 பேர் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறியது பாதிப்பை ஏற்படுத்தியது. எங்களது பேட்டிங் தவறுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியமானதாகும். ஒரு ஆட்டத்தை தவிர மற்ற எல்லா ஆட்டங்களும் எங்களது பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர்’ என்றார்.