இணையத்தில் நாளிதழ்: போலீசார் எச்சரிக்கை
செய்தித்தாள், வார இதழ்களை மர்ம நபர்கள் இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்து குறைந்த கட்டணம் என சந்தா வசூலித்து வருகின்றனர். ‘பேஸ்புக், வாட்ஸ் ஆப்’ போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இது குறித்து ஒரு வார இதழின் நிர்வாக இயக்குனர் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு மற்றும் சைபர் கிரைம் போலீசார், துாத்துக்குடியைச் சேர்ந்த, தனியார் நிறுவன மென்பொறியாளர் ஆனந்த், 21, என்பவன், ‘மேக்னட் டாட் காம்’ என்ற பெயரில் இணைய பக்கம் துவங்கி, குற்றச் செயலில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, அவனை கைது செய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.
போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: செய்தித்தாள், வார இதழ்களை அந்தந்த நிறுவனங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றன. அதை மர்ம நபர்கள் திருடி, இணையம், சமூக வலைதளங்களிலும் பரபரப்பி வருகின்றனர்; இது, காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது. இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டம் பாயும். இவ்வாறு அவர்கள் கூறினர்.