இந்தியவகை மாம்பழங்களுக்கு உரிமை கொண்டாடுகிறது பாக்.,
இந்திய வகை மாம்பழமான ராடூல் வகை மாம்பழங்களுக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடி வருகிறது.
இந்தியாவில் உத்திரபிரதேச மாநிலம் ராடூல் என்ற கிராமத்தில் ராடூல் வகை மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதே போல் பாகிஸ்தானில் முல்தான் என்ற பகுதியிலும் அன்வர் ராடூல் என்ற மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மாம்பழத்திற்கு தற்போது இருநாடுகளும் உரிமை கொண்டாடி வருகிறது.
இது குறித்து இந்தியாவில் ராடூல் மாம்பழம் உற்பத்தி செய்யும் விவசாயி கூறுவதாவது :‛‛ இப்பிரச்னை இந்திரா காந்தி காலத்திலேயே துவங்கியது. அப்போதைய பாக்., பிரதமர் இந்திரா காந்திக்கு பாக்.,கில் சிறப்பாக விளையும் மாம்பழங்கள் என அன்வர் ராடூல் வகை மாம்பழங்களை பரிசளித்தார். இது குறித்து செய்தி வெளியானது. ராடூல் கிராம மக்கள் டில்லிக்கு சென்று பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்து ராடூல் வகை மாம்பழங்கள் இந்தியாவிற்கு சொந்தமானது என்றும், அதன் வேர்கள் இந்தியாவில் உருவானது என்பதை விளக்கினர்.
அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து பாக்.,கிற்கு புலம்பெயர்ந்த சிலர் ராடூல் வகை விதைகளை எடுத்து சென்று பாக்.,கில் விளைய வைத்திருக்கலாம் என்பதையும் விளக்கினர். பாக்.,கில் விளைவிக்கப்படும் ராடூல் வகை மாம்பழங்கள் இந்தியாவில் உள்ள அல்போன்சா மாம்பழ சுவை போலவே உள்ளதாக கூறுகின்றனர். அது உண்மையான ராடூல் வகை மாம்பழங்கள் தானா என்பதை கண்டறிய வேண்டும். ” என கூறினார்.
கடந்த 2015ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையின் போது பாக்., பிரதமர் நவாஸ் செரீப், பிரதமர் நரேந்திர மோடிக்கு மாம்பழங்கள் பரிசளித்தது. குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பாக்.,கில் ராடூல் வகை மாம்பழங்களை உற்பத்தி செய்யும் நிசார் தெரிவிப்பதாவது :‛‛ நான் சிறுவயதாக இருக்கும் போது ராடூல் வகை மாம்பழங்கள் அதிகஅளவில்இங்கு உற்பத்தி செய்யப்பட்டது. பார்க்கும் இடமெல்லாம் மாம்பழங்கள் தான் தென்படும். தற்போது இப்பகுதியில் நிலத்தடி நீர் 100 அடிக்கும் கீழே சென்று விட்டது. இதனால் தற்போது விளையும் மாம்பழங்களின் சுவையும் அளவும் மாறிவிட்டது. ” என கூறினார்.
இரு நாடுகளில் விளைவிக்கப்படும் இவ்வகை மாம்பழங்கள் பெரும்பாலும் உள்ளூர் சந்தைகளில் விற்கப்படுவதில்லை பெரும்பாலும் வெளிநாட்டிற்கே ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் அந்த மாம்பழங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளும், பாக்.,கில் ராடூல் வகை மாம்பழங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளும் அந்த மாம்பழத்திற்கு உரிமை கொண்டாடி வருகின்றனர்.