எவின் லூயிஸ் 62 பந்துகளில் 125 நாட் அவுட்: இந்திய அணியை நொறுக்கியது மே.இ.தீவுகள்
கிங்ஸ்டனில் நடைபெற்ற டி20 போட்டியில் எவின் லூயிஸ் 6 பவுண்டரிகள் 12 சிக்சர்களுடன் 62 பந்துகளில் 125 ரன்கள் விளாச இந்திய அணியின் 190 ரன்களை மே.இ.தீவுகள் அடித்து நொறுக்கி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. 15 ஓவர்கள் பக்கம் 150 ரன்கள் இருந்த இந்திய அணி குறைந்தது 200-210 ரன்களையாவது எடுத்திருக்க வேண்டும், இன்னும் சொல்லப்போனால் 230 ரன்கள்தான் இந்தப் பிட்சில் வெற்றி பெறுவதற்கான ஸ்கோராகும். ஆனால் மீண்டும் பினிஷர் தோனி 2 ரன்களில் பினிஷ் ஆனார், கேதர் ஜாதவ்வும் சொதப்ப, கடைசியில் அஸ்வின், ஜடேஜா ஷாட்களை ஆடமுடியாமல் திணற இந்திய அணி 20 ஓவர்களில் 190/6 என்று முடிந்தது.
ஆனால் இதுவும் கூட நல்ல ஸ்கோர்தான், ஆனால் இந்திய அணியின் மோசமான பவுலிங், அதை விட தரமற்ற பீல்டிங், எவின் லூயிஸ் மைதானம் நெடுக இந்தியப் பந்து வீச்சை அடித்து விரட்டியது என மே.இ.தீவுகள் 18.3 ஓவர்களில் கெய்ல் விக்கெட்டை மட்டுமே இழந்து 194 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டி20 சர்வதேச விரட்டலில் அதிக பட்ச ஸ்கோர் எவின் லூயிஸின் இந்த 125 நாட் அவுட்தான்.
அஸ்வின், ஜடேஜா பந்துகளில் சிக்சர்களைத்தான் அடிப்பேன் என்று அடம்பிடித்தார் எவின் லூயிஸ், இவரது டி20 கிரிக்கெட் கரியரில் பவுண்டரிகளை விட சிக்சர்களே அதிகம். 2016-ல் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 போட்டியில் எவின் லூயிஸ் 49 பந்துகளில் 5 பவுண்டரிக்ள் 9 சிக்சர்களுடன் சதம் கண்டார். அந்தப் போட்டியில்தான் தோனி கடைசியில் 1 ரன் எடுக்க முடியாமல் தோல்விக்குக் காரணமானார். நேற்று எவின் லூயிஸ் 24 பந்துகளில் அரைசதம், 53 பந்துகளில் சதம், 62 பந்துகளில் 125. இதில் 6 பவுண்டரிகள் 12 சிக்சர்கள்.
அஸ்வின் 4 ஓவர்களில் 39 ரன்கள், ஜடேஜா 3.3 ஓவர்களில் 41. இருவரும் 9 சிக்சர்கள் 2 பவுண்டரிகளை தங்கள் 7.3 ஓவர்களில் விட்டுக் கொடுத்தனர். இத்தனைக்கும் ஜடேஜா 10 டாட் பால், அஸ்வின் 11 டாட் பால். எவின் லூயிஸின் 12 சிக்சர்களும் இந்திய பந்து வீச்சை ஏளனமாக மதித்த சிக்சர்களாகும்.
மே.இ.தீவுகளால் பேட் செய்ய அனுப்பப்பட்ட போது விராட் கோலிக்கும், ஷிகர் தவணுக்கும் எவின் லூயிஸின் ஆகிருதி தெரிந்திருக்க வேண்டும், அதனால்தான் தவன், கோலி இணைந்து 5.3 ஓவர்களில் 64 ரன்களை தொடக்கத்தில் சேர்த்தனர். ஆனால் கடைசியில் ரிஷப் பந்த் 35 பந்துகளில் 38 என்று சற்றே மெதுவான இன்னிங்சை ஆடினார். அவரைச் சொல்லி குற்றமில்லை, 4 ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கொடுக்காமல் திடீரென கொடுத்தால் அவருக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல்தான் இருக்கும்.
தினேஷ் கார்த்திக் 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் எடுத்திருந்த போது முக்கியமான கட்டத்தில் சாமுவேல்ஸ் பந்தை பின்பக்கமாக அடிக்கப் போய் பவுல்டு ஆனார். தோனி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்தை வீசினால் ஆட்டமிழப்பார் என்று தெரிந்து டெய்லர் ஒரு பந்தை வெளியே வீசினார், அந்தப் பந்துக்கு தோனி என்ன ஷாட்டை ஆடினார் என்பது அவருக்கே வெளிச்சம் அருகிலேயே கொடியேற்றப்பட்டதில் சாமுவேல்ஸ் மிக எளிதான கேட்சைப் பிடித்தார். தோனி மொத்தம் 3 பந்துகளே ஆடினார். கேதர் ஜாதவ், 4 ரன்கள் எடுத்து வில்லியம்ஸ் பந்தில் அசிங்கமான ஷாட்டில் நரைனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
விராட் கோலி சில அருமையான பவுண்டரிகளுடனும் ஒரு சிக்சருடனும் 22 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வில்லியம்ஸின் வேகம் குறைந்த ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை தவறாகக் கணித்து மிட் ஆனில் கொடியேற்றினார் நரைன் கேட்ச் பிடித்தார். ஷிகர் தவண் 12 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்து பெரிய இன்னிங்ஸிற்காக அடித்தளம் அமைத்த நிலையில் ரிஷப் பந்த் இழுத்து விட ரன் அவுட் ஆனார். தோனி, பந்த்தும் டெய்லரிடம் அடுத்தடுத்து வீழ்ந்தனர். ஜடேஜா ஹாட்ரிக்கை தடுத்தார். கடைசி 6 ஓவர்களில் 4 பவுண்டரிகளே வந்தது. இந்தியா 190 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
லூயிஸின் கருணையற்ற அடி:
எவின் லூயிஸ் இந்த பவுலர்தான் என்றில்லாமல், அனைத்து இந்திய பவுலர்களையும் கருணையின்றி விளாசினார். கோலியின் களவியூகத்தை ஏளனம் செய்வது போல் தன் போக்கிற்கு அவர் இடைவெளிகளில் பந்தை அடித்து பவுண்டரிகள், சிக்சர்களை விளாசினார். ஆனால் இம்மாதிரியான ஓய்வு ஒழிச்சலற்ற அடியில் அவுட் வாய்ப்புகளும் உண்டு, அப்படிப்பட்ட தருணத்தில்தான் கோலியின் கேட்சிற்கு ஷமி இடையூறாக வந்தார் கேட்ச் தவறவிடப்பட்டது. அடுத்த ஓவரிலேயே 3 பேர் குவிந்து கேட்ச் விடப்பட்டது. முன்னதாக தோனி ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பையும் நழுவ விட்டிருந்தார்.
அதன் பிறகே இந்திய பந்து வீச்சுக்கு உரியடி உத்சவம் நடத்தினார் எவின் லூயிஸ் ஒரு கட்டத்தில் கூட இந்திய அணிக்கு வெற்றி பெறும் சிறு துளி நம்பிக்கை கூட இல்லாமல் செய்து விட்டார் ஆட்ட நாயகன் எவின் லூயிஸ். இந்திய பவுலர்களில் புவனேஷ் குமார் மட்டுமே 4 ஓவர்கள் 27 ரன்கள் என்று குறைவாக ரன் கொடுத்தவராக திகழ்ந்தார்.