சாதனையின் சிகரம் இயக்குனர் பாலசந்தர் : சிலை திறப்பு விழாவில் வைரமுத்து புகழாரம்
நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் போன்ற சாம்ராஜ்யங்களை தாண்டி, சாதனையின் சிகரமாக பாலசந்தர் திகழ்ந்தார்” என, கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டினார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த நல்லமாங்குடியில் பிறந்தவர், மறைந்த திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தர். பள்ளி ஆசிரியராக வாழ்க்கையை துவங்கிய அவர், தமிழ் திரைப்படத் துறையில் இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர் என பன்முகம் கொண்டு செயல்பட்டார். ‘தாதா சாகேப் பால்கே’ உள்ளிட்ட பல விருதுகளை பெற்று, தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உட்பட பல நடிகர்கள், நடிகைகளை சினிமாத் துறையில் ஜொலிக்க வைத்தவர். இவர் பிறந்த வீடு, தற்போது தனியார் பள்ளியாக இயங்கி வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் பாலச்சந்தர் வெண்கல உருவச் சிலையை கவிஞர் வைரமுத்து நிறுவியுள்ளார்.இதன் திறப்பு விழா, அவரது பிறந்த நாளான நேற்று நடைபெற்றது. சிலையை பாலசந்தர் மனைவி ராஜம் திறந்து வைத்தார்.
விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது: பாலசந்தர் தனி மனிதர் அல்ல; அவர் ஒரு நிறுவனம். அவரது வாழ்க்கையை இளைஞர்கள் பாடமாக கொள்ள வேண்டும். பாலசந்தர் ஒரு குறியீடு. அவர், நிறுவனங்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்ற சாம்ராஜ்ஜியங்களை தாண்டி புகழ்கொடி நாட்டி, சாதனையின் சிகரமாக திகழ்ந்தார். திரைப்பட துறையில் அர்த்தமற்ற நம்பிக்கையை உடைத்தவர். மூடநம்பிக்கையை தகர்த்தவர். இந்த ஊருக்கு பாலசந்தர் என்ன செய்தார் என்று முணுமுணுப்பதாக தெரியவந்துள்ளது. அவரை அரசியல்வாதி ஆக்கி விடாதீர்கள். அவர் ஒரு கலைஞர். ஊருக்கு நல்லது செய்ய அவர் கவுன்சிலரோ, எம்.எல்.ஏ.,வோ அல்ல. சினிமாவில் ஜெயிப்பது என்பது முள்ளில் நடந்து தேன் எடுப்பது போன்றது. பாலசந்தர் நல்லுமாங்குடி சொத்து மட்டும் அல்ல. அவர் தேசிய சொத்து.இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் இயக்குனர் மணிரத்னம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.