சென்னையில் நேற்றிரவு கனமழை : நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ., கொட்டியது
சென்னையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால், சில மாதங்களாக கோடை வெயிலில் தவித்த மக்கள், மகிழ்ச்சி அடைந்தனர். சென்னையில் நேற்று இரவு, 7:00 மணிக்கு லேசாக பெய்ய துவங்கிய மழை, படிப்படியாக அதிகரித்து, கனமழையாக மாறியது. ஒரு மணி நேரம் வரை, பெய்த மழையால், சில மாதங்களாக கோடை வெப்பத்தில் தவித்த, சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கூடுதல் நேரம் மழை பெய்யாதா என, ஏங்கினர்.
வதந்தி : ஞாயிற்றுக்கிழமை என்பதால், வீடுகளில் இருந்தவர்கள், மழையின் குளிர்ச்சியை அனுபவித்தனர். ‘கிளவுட் பர்ஸ்ட்’ எனப்படும், மேக வெடிப்பு ஏற்பட்டதாக வதந்தி பரவியது.
மழை குறித்து, வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது: வெப்ப சலனம் காரணமாகவே, மழை பெய்தது. மேற்கில் இருந்து வீசிய காற்று, வலுவாக இருந்ததால், காஞ்சிபுரம் அருகே மேகங்கள் கூடி, திருவள்ளூர், சென்னை மாவட்டம் வரை, திடீர் வெப்ப சலனம் ஏற்பட்டு, மழை பெய்தது.
இரவு, 8:30 மணி நிலவரப்படி, நுங்கம்பாக்கத்தில், 7; மீனம்பாக்கத்தில், 3 செ.மீ., மழை பதிவானது.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்னும் நான்கு நாட்களுக்கு, இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. பெரும்பாலும், மாலை, இரவு நேரங்களில் மழை பெய்யும்.இவ்வாறு, வானிலை மையம் தெரிவித்தது.திருப்புவனத்தில் ௪ செ.மீ.,நேற்று காலை, 8:30 மணியுடன் முடிந்த, 24 மணி நேரத்தில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அதிகபட்சம், 4 செ.மீ., மழை பெய்தது. சிவகங்கை, 3; தஞ்சாவூர் வல்லம், 2; கொடுமுடி, அறந்தாங்கி, இளையான்குடி, மேட்டுப்பட்டியில், 1 செ.மீ., மழை பதிவாகி இருந்தது.