தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல்
கேரள மாநிலத்தில் உள்ள பூக்கொட்டுகாவு கிராமத்தை சேர்ந்த 300பெண்கள், தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்காக 190 கிணறுகளுக்கு மேல் தூர்வாரி அசத்தி வருகின்றனர்.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது பூக்கொட்டுகாவு கிராமம். கடந்த ஆண்டு இப்பகுதியில் போதிய மழை பொய்த்ததால் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
தண்ணீர் பற்றாக்குறையை போக்க என்ன செய்யலாம் என பஞ்சாயத்து சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளை தூர்வாரி முறையாக பயன்படுத்தி வந்தாலே, தண்ணீர் பற்றாக்குறையை போக்கி விடலாம் என பலரும் கருத்து தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து, பஞ்சாயத்து உறுப்பினர்களின் உதவியுடன், மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டம் சார்பில் கிணறுகளை தூர்வாரும் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப் பட்டன.கிணறு தூர்வாரும் பணிகளில் ஆண்களுக்கு ஈடாக பெண்களும் ஈடுபட்டு வந்தனர். ஆனால், சில நாட்களிலேயே பெண்களின் உறவினர்கள், இது உங்களுக்கு சரிப்படாது. எனவே நீங்கள் வேறு வேலை பார்க்கச் செல்லலாம் என தெரிவித்தனர்.
கூலி வாங்கவில்லை
தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவது நாம் தானே என எண்ணிய 300பெண்கள், கிணறு தூர்வாரும் பணியில் கூலி வாங்காமல் தொடர்ந்து ஈடுபட ஆரம்பித்தனர். இப்பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்களின் வயது 35 வயதிலிருந்து 70 வரை உள்ளவர்கள். இவர்கள் இதுவரை 190 கிணறுகளுக்கு மேல் தூர்வாரி சாதனை படைத்துள்ளனர். இந்த கிணறுகள் 10லிருந்து 12 மீட்டர் ஆழமான கிணறுகள்.
தண்ணீர் பிரச்னைக்கு வாய்ப்பில்லை
இதுகுறித்து பூக்கொட்டுக்காவு கிராமத்தை சேர்ந்த லட்சுமி கூறுகையில், கிணற்றை தூர் வாருவது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. சில நாள்களில் கிடைத்த பயிற்சியை கொண்டு நாங்கள் இதை தொடர்ந்து படிப்படியாக செய்து வருகிறோம். பல பெண்களையும் இதில் ஈடுபடுத்தி வருகிறோம். எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.
முதலில் எங்களுக்கு ஒரு நாள் கூலியாக 240 ரூபாய் தந்தனர். ஆனால் கடந்த 7 மாதமாக ஒரு பைசா கூட வாங்காமல் உள்ளூர் தண்ணீர் பற்றாக்குறையை போக்கவே இதை செய்து வருகிறோம். நிலுவை தொகையை தந்து விடுவார்கள் என நம்புகிறேன். இனி தண்ணீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.
ஆண்களுக்கு இணையாக கிணறுகளை தூர்வார முடியும் என நிரூபித்து காட்டிய பூக்கொட்டுகாவு கிராம பெண்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.