மீண்டும் உலக போர்’: வட கொரியா மிரட்டல்
தென் கொரியாவுடன் இணைந்து, அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதன் மூலம், மீண்டும் ஒரு உலகப் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது’ என, வட கொரியா மிரட்டல் விடுத்துள்ளது.
கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, சர்வ தேச நாடுகளின் எதிர்ப்பு மற்றும் ஐ.நா., பொருளாதார தடையை மீறி, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. சமீபத்தில், அமெரிக்காவின் அலாஸ்கா வரை சென்று தாக்கி அழிக்க கூடிய, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது.
இதற்கு பதிலடியாக, தென் கொரியா கடல் பகுதியில், அந்நாட்டு ராணுவத்துடன் இணைந்து, அமெரிக்க படைகள் கூட்டாக, போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இருநாடுகளின் விமானங்கள், நேற்று முன்தினம், வானில் பறந்து குண்டு மழை பொழிந்தன; இதற்கு வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அந்நாட்டு பத்திரிகைகள் கூறியுள்ளதாவது: கொரிய தீபகற்ப பகுதியில், அமெரிக்க ராணுவம், தென் கொரியாவுடன் இணைந்து, பதுங்கு குழிகளை தாக்கி அழிக்க வல்ல, சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி, தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த அத்துமீறல்களால், கொரிய தீபகற்ப பகுதியில், பதற்றம் நிலவி வருகிறது. இங்கு, அணு ஆயுத போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், மீண்டும் ஒரு உலகப் போர் ஏற்படும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த பத்திரிகைகளில் கூறப்பட்டுள்ளது.