ஹிப்ஹாப் ஆதியின் வாழ்க்கை வரலாறு ‘மீசைய முறுக்கு’: சுந்தர்.சி
ஹிப்ஹாப் ஆதியின் வாழ்க்கை வரலாறு தான் ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் என்று தயாரிப்பாளர் சுந்தர்.சி தெரிவித்தார்.
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இயக்குநர் மற்றும் நாயகனாக அறிமுகமாகவுள்ள படம் ‘மீசைய முறுக்கு’. சுந்தர்.சி தயாரித்துள்ள இப்படத்தில் ஆத்மிகா, மனிஷா, விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
ஜூலை 21-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சுந்தர்.சி பேசியதாவது:
‘கிளப்புல மப்புல’ பாடல் வெளியான சமயத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியை சந்தித்தேன். ஏதோ பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர் என்று நினைத்திருந்தேன். ஆனால் பழைய ஜீன்ஸ் , டீ- ஷார்ட் போட்டுக்கொண்டு என்னை சந்திக்க வந்தார்.
‘ஆம்பள’ படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைக்க வேண்டும் என்று கூறினேன். முதலில் ‘ஆம்பள’ படத்தில் 5 பாடல்களுக்கு 5 இசையமைப்பாளர்களை நியமிக்கலாம் என்று கருதினேன். ஆதி இசையமைத்த ‘பழகிக்கலாம்’ பாடலைக் கேட்டேன், நன்றாக இருந்தது. அதன் பின் “நான்தான் அனைத்து பாடல்களுக்கும் இசையமைப்பேன்” என்று கூறினார். சரி என்று விட்டு விட்டேன், அப்படத்தின் அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்றது. அதன் பின் ‘ஆம்பள’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஆதியை கதாநாயகனாக அறிமுகம் செய்ய உள்ளேன் என்று கூறினேன். அது இன்று நிறைவேறிவுள்ளது.
‘மீசைய முறுக்கு’ ஹிப்ஹாப் ஆதியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் போல் இருக்கும். கொஞ்சம் கற்பனை கதை, நிறைய உண்மைக் கதை. ஆதி இக்கதையை என்னிடம் கூறியதும் மிகவும் பிடித்திருந்தது. அவரை மிகப் பெரிய அளவில் நான் அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவரோ தன்னோடு இசை ஆல்பத்தில் பயணித்த அதே அணியோடு பயணிக்க வேண்டும் எனக் கேட்டார்.
அவர் சொன்னது போலவே இக்குழு சிறப்பாக பணியாற்றி நல்ல படத்தை எடுத்துள்ளது. யூடியூப் ஸ்டார்ஸ் பலர் இப்படத்தின் மூலமாக அறிமுகமாகி உள்ளார்கள். படத்தில் எனக்கு சாராவின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. நான் சாராவின் ரசிகன்
இவ்வாறு சுந்தர்.சி பேசினார்.