4 மணி நேரம் 48 நிமிடங்கள் போராடி வீழ்ந்தார் ரபேல் நடால்
விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்றில் இருமுறை சாம்பியனும், 4-ம் நிலை வீரருமான ஸ்பெயினின் ரபேல் நடால் போராடி தோல்வியடைந்தார்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடால், 16-ம் நிலை வீரரான லக்சம்பர்க் நாட்டை சேர்ந்த கில்லஸ் முல்லரை எதிர்த்து விளையாடினார். முதல் இரு செட்களையும் நடால் 3-6, 4-6 என இழந்தார். எனினும் அடுத்த இரு செட்களிலும் பதிலடி கொடுத்தார்.
3 மற்றும் 4-வது செட்டை நடால் 6-3, 6-4 என கைப்பற்றினார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட் மிகவும் பரபரப்பானது. இந்த செட்டில் முல்லர் கடும் நெருக்கடி கொடுத்தார். முடிவில் அவர் இந்த செட்டை 15-13 என தனதாக்கினார்.
சுமார் 4 மணி நேரம் 48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கில்லஸ் முல்லர் 6-3, 6-4, 3-6, 4-6, 15-13 என்ற செட் கணக்கில் ரபேல் நடாலை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். சில வாரங்களுக்கு முன்பு 10-வது முறையாக பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற நடால், விம்பிள்டனில் 4-வது சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
விம்பிள்டன் போட்டியில் நடால், கால் இறுதிக்கு முந்தைய சுற்றுடன் வெளியேறுவது இது 5-வது முறையாகும். 31 வயதான அவர், 2010-ம் ஆண்டுக்கு பிறகு விம்பிள்டனில் பட்டம் வென்றது இல்லை. கடைசியாக 2011-ம் ஆண்டு கால் இறுதி வரை முன்னேறியிருந்தார்.
இந்த தோல்வியின் மூலம் விம்பிள்டனில் 3-வது முறையாகவும் ஒட்டுமொத்தமாக 16-வது முறையாகவும் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் நடாலின் கனவு தகர்ந் துள்ளது. போட்டி முடிவடைந்ததும் நடால் கூறும்போது, “நான் திரும்பி வரப்போவதில்லை என்று ஒருபோதும் கூறியதில்லை.
விம்பிள்டனில் நான் மீண்டும் விளையாட விரும்புகிறேன். இங்கு ரசிகர்கள் அளிக்கும் ஆதரவு உணர்வுப்பூர்வமானது. அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள் கிறேன்” என்றார்.
அதேவேளையில் 34 வயதான கில்லஸ் முல்லர், முதன்முறையாக விம்பிள்டன் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். கால் இறுதியில் அவர், அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனான குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்த்து விளையாட உள்ளார். 28 வயதான மரின் சிலிச் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வெற்றியின் மூலம் முல்லர், தரவரிசையில் முதல் 5 இடங்களில் உள்ள வீரர்களுக்கு எதிராக தொடர்ச்சி யாக 22 ஆட்டங்களில் அடைந்த தோல்வி களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.