Breaking News
இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருணை நியமிக்க ரவிசாஸ்திரி முயற்சி

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆல்-ரவுண்டர் ரவிசாஸ்திரி கடந்த செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார். இந்திய அணி கேப்டன் விராட்கோலியின் ஆதரவால் அவரது பெயரை கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினர்களான கங்குலி, தெண்டுல்கர், லட்சுமண் ஆகியோர் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பரிந்துரை செய்தனர். பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானும், குறிப்பிட்ட வெளிநாட்டு தொடர்களில் பேட்டிங் ஆலோசகராக முன்னாள் கேப்டன் டிராவிட்டும் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பயிற்சியாளர் நியமனம் தொடர்பான ஆலோசனையின் போது நடந்த விவரங்கள் கசிந்துள்ளன. கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் பந்து வீச்சு பயிற்சியாளர் நியமனம் குறித்து விவாதிக்கையில் ரவிசாஸ்திரி தனக்கு வேண்டிய பரத் அருணை பரிந்துரை செய்து இருக்கிறார். ஆனால் அதனை கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. கூடுதலாக ஒரு பெயரை பரிந்துரை செய்ய சொன்னதும் அவர் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கில்லெஸ்பி பெயரை சிபாரிசு செய்து இருக்கிறார். அவர் பப்புவா நியூ கினியா அணியின் பயிற்சியாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டு இருப்பதால் அவரை ஒப்பந்தம் செய்ய முடியாது என்று ஆலோசனை கமிட்டி தெரிவித்து விட்டது. ஆலோசனை கமிட்டி சார்பில் வெங்கடேஷ் பிரசாத்தின் பெயர் முன்மொழியப்பட்டது. அதனை ஏற்க இயலாது என்று ரவிசாஸ்திரி கூறி விட்டார்.

மேலும் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் ஜாகீர்கான் முழுநேர பந்து வீச்சு பயிற்சியாளராக இருக்க இயலாது என்றும் சம்பளமாக ரூ.4 கோடி கேட்பதாகவும் கூறப்படுகிறது. அவர் நியமனம் குறித்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் ரவிசாஸ்திரி இந்த வார இறுதியில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர்கான் வழிகாட்டட்டும், அதனை செயல்படுத்தும் பயிற்சியாளராக பரத் அருணை நியமிக்கும் படி பரிந்துரை செய்ய இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ரவிசாஸ்திரியின் இந்த முயற்சிக்கு பலன் கிடைக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.