தனியார் பள்ளி கட்டண முறையில் வருகிறது மாற்றம்?
தனியார் பள்ளிகளுக்கான கட்டண முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. புதிய முறைகளுக்கான சட்ட திருத்த மசோதா சட்டசபையில் இன்று (ஜூலை 14) தாக்கல் செய்யப்பட உள்ளது.
தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்களும், அதன் தொடர்ச்சியாக போராட்டங்களும் நடத்தப்பட்டதை அடுத்து 2009 ம் ஆண்டு, ஓய்வுபெற்ற நீதியரசர் கோவிந்தராஜன் தலைமையில் கட்டண நிர்ணய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் வழிகாட்டுதலின் பேரில் கட்டண நிர்ணயம் செய்ய புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் 2013 ம் ஆண்டு முதல் 2016 வரையிலான கட்டண நிர்ணய குழு சிங்காரவேலன் தலைமையில் இயங்கியது. தற்போது மாசிலாமணி தலைமையில் கட்டண நிர்ணய குழு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2009 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தனியார் பள்ளி கட்டண முறைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதாவை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.