Breaking News
தமிழ் குடும்பத்தை சேர்ந்த மிதாலி ராஜ்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் 34 வயதான மிதாலிராஜ் ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 183 ஆட்டங்களில் விளையாடி 6,028 ரன்கள் குவித்துள்ளார். ஒரு நாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற மகத்தான சாதனையை படைத்திருக்கும் மிதாலி ராஜிக்கு சச்சின் தெண்டுல்கர், கும்பிளே, வி.வி.எஸ்.லட்சுமண், கவுதம் கம்பீர், ஆண்கள் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ‘இது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த தருணம்’ என்று கோலி குறிப்பிட்டுள்ளார். ‘மிதாலி ராஜ் உற்சாகமாக புத்தகங்களை படிக்கிறார். ஆனால் இப்போது வரலாற்று சாதனை புத்தகத்தையே மாற்றி எழுதியிருக்கிறார்’ என்று ஐ.சி.சி. தரப்பில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

அறிமுக ஆட்டத்திலேயே அதுவும் குறைந்த வயதில் (17) செஞ்சுரி அடித்தவர், அதிக அரைசதங்கள் விளாசியவர் (49 அரைசதம்) இப்படி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான மிதாலி ராஜ் பிறந்தது ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில். வளர்ந்து, குடியேறியது ஐதராபாத்தில். ஆனால் அவரது தாய்மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அவரது பெற்றோர் பெயர் துரைராஜ்- லீலா.

துரைராஜின் பெற்றோர் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள். அவரது தந்தைக்கு ரெயில்வேயில் வேலை கிடைத்ததால் அங்கிருந்து ஐதராபாத்துக்கு குடும்பத்தோடு குடியேறிவிட்டார். துரைராஜ், விமானப்படையில் பணியாற்றி விட்டு, ஆந்திரா வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். வீட்டில் எல்லோரும் பெரும்பாலும் தமிழ் தான் பேசுவார்கள். அதனால் மிதாலிக்கும் தமிழ் பேச தெரியும்.

‘பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் தெண்டுல்கர்’ என்று வர்ணிக்கப்படும் மிதாலிராஜ் சிறுவயதில் பரதநாட்டியத்தில் பெரிய அளவில் வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் எதிர்பாராதவிதமாக 10-வது வயதில் கிரிக்கெட் மட்டையை பிடித்த அவர், இப்போது கிரிக்கெட் மைதானத்தில் மட்டையால் ‘பரதநாட்டியம்’ ஆடிக்கொண்டு இருக்கிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.