பாக்.,குடனான பிரச்னைகள்; இந்திய நிலையில் மாற்றமில்லை’
‘பாகிஸ்தானுடனான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான நிலையில், எந்தவித மாற்றமும் இல்லை’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாற்றமில்லை:
இந்தியா – பாகிஸ்தான் இடையே சமரசம் ஏற்பட உதவி செய்ய தயாராக இருப்பதாக, சீன அரசு அறிவித்திருந்தது. இது பற்றி, இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது: பாகிஸ்தானுடனான பிரச்னைகளுக்கு இரு தரப்பு பேச்சு மூலம் தான் தீர்வு காண வேண்டும் என்ற நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை; மூன்றாவது நபர் தலையீட்டை, இந்தியா ஒரு போதும் ஏற்காது.
பிரச்னைக்கு தீர்வு:
இந்தியா – பாகிஸ்தான் இடையே, முக்கிய பிரச்னையாக, எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தினால் மட்டுமே, பாகிஸ்தானுடன் நடத்தும் பேச்சு, அர்த்தமுள்ளதாக இருக்கும். இந்தியா – சீனா இடையேயான பிரச்னைக்கு தீர்வு காண, துாதரக அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
அஜீத் தோவல் பயணம் :
இம்மாத இறுதியில், சீனாவின், பீஜீங் நகரில், ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு நாடுகளின், மாநாடு நடக்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜீத் தோவல், பீஜீங் செல்கிறார். அப்போது, தற்போதுள்ள எல்லை பிரச்னை குறித்து, சீன தலைவர்களுடன், அவர் பேச்சு நடத்த வாய்ப்புள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.