இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு ரூ.7.5 கோடி சம்பளம்
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவி சாஸ்திரிக்கு ஆண்டொன்றுக்கு ரூ.7 கோடியில் இருந்து 7.5 கோடிக்குள் சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, கடந்த சில தினங்களுக்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது நியமனத்தை கிரிக்கெட் நிர்வாகக் கமிட்டியும் ஏற்றுக்கொண்டுள்ளது. ரவி சாஸ்திரியுடன் கலந்து ஆலோசித்த பிறகு, மற்ற பயிற்சியாளர்கள் நியமனம் குறித்து அறிவிப்பதாக நிர்வாக கமிட்டி அறிவித்துள்ளது. இந்நிலையில் ரவி சாஸ்திரிக்கு ஆண்டொன்றுக்கு ரூ.7 கோடி முதல் 7.5 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பிசிசிஐயின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான அனில் கும்ப்ளே, கடந்த மே மாதம் அளித்த அறிக்கையில், பயிற்சியாளருக்கு ஆண்டொன்றுக்கு ரூ.7 கோடியை சம்பளமாக வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். அதன்படி ரவி சாஸ்திரிக்கு ரூ.7 கோடி முதல் 7.5 கோடிக்குள் சம்பளத்தை நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளோம். உதவி பயிற்சியாளர்களுக்கு ரூ.2 கோடிவரை சம்பளம் வழங்கப்படும் ” என்றார். ரவி சாஸ்திரி இந்திய அணியின் இயக்குநராக இருந்தபோது ஆண்டொன்றுக்கு ரூ.7 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணி மற்றும் இந்திய ஏ அணி பயிற்சியாளராக இருக்கும் டிராவிட்டுக்கு முதல் வருடம் ரூ.4.5 கோடியும் அடுத்த வருடம் ரூ.5 கோடியும் வழங்கப்பட்டு வந்தது. இப்போது பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்படும் அவருக்கு அதிக சம்பளம் கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.