கடல் நீர் மட்டம் அதிகரிக்குமாம்; சென்னை, மும்பைக்கு ஆபத்து
வரும் காலத்தில், ஆசிய பிராந்தியத்தில், சென்னை, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட, 25 நகரங்களில், 1 மீட்டர் அளவுக்கு, கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், அதனால், இந்த நகரங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்படலாம் என்றும், ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியா, பசிபிக் நாடுகளில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த புதிய ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவின் மிக தாழ்வான கடற்கரையோர பகுதிகளில், 2000ல், மக்கள் தொகை, 6 கோடியாக இருந்தது. வரும், 2060ல், இது, 21.6 கோடியாக உயரும் அபாயம் உள்ளது. தற்போது காணப்படும் தொழில் வளர்ச்சி, புவி வெப்பமயமாதலை வைத்து பார்க்கையில், வருங்காலத்தில், ஆசிய கண்ட நிலப்பரப்பில், 6 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மழை குறையும்:
தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனாவின் வடமேற்கு பகுதி ஆகியவற்றில், 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும். ஆப்கானிஸ்தானில், மழை பொழிவு, 20 – 50 சதவீதம் குறையும் வாய்ப்புள்ளது. ஆசிய பிராந்தியத்தில், தாழ்வான பகுதிகளில், வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. 25 நகரங்களில், 1 மீட்டர் அளவுக்கு, கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் மட்டும், ஏழு நகரங்கள், இந்த ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன.
பாதிப்பு:
இந்தோனேஷியாவில் பல நகரங்களின் கடலோரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம். இதனால், 2100 வரை, ஒவ்வொரு ஆண்டும், 59 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படும். கடந்த, 2005லிருந்து, வரும், 2050ம் ஆண்டு வரை, ஆண்டுதோறும், வெள்ளத்தால் அதிக இழப்பு ஏற்படும், 20 நகரங்களில், 13 நகரங்கள், ஆசியா – பசிபிக் பிராந்தியத்தில் உள்ளன.
வெள்ள அபாயம்:
இவற்றில், இந்தியாவைச் சேர்ந்த, சென்னை, மும்பை, கோல்கட்டா, சூரத், சீனாவைச் சேர்ந்த, குவாங்ஸு, ஷென்ஷென், டியான்ஜின், ஜான்ஜியாங், ஜப்பானைச் சேர்ந்த, நகோயா, பாங்காக் தலைநகர் தாய்லாந்து, வியட்நாமைச் சேர்ந்த, ஹோ சி மின் சிட்டி, இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஜகர்த்தா ஆகிய நகரங்கள் உள்ளன.
தப்பிக்கலாம்?
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளை உறுதியுடன் பின்பற்றினால், வெப்பநிலை உயர்வு, வெள்ள அபாயம் போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம். இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.