டெல்லியில் போராட்டம் தொடங்கியது: பிரதமர் இல்லம் அருகே மறியல் தமிழக விவசாயிகள் கைது
டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே போராட்டம் நடத்த முயன்ற தமிழக விவசாயிகளை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 14-ம் தேதி தொடர் போராட்டத்தை தொடங்கினர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளைக் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி தமிழக முதல்வர் கே.பழனிசாமி டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
அதைத்தொடர்ந்து மே 25-ம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக அய்யாகண்ணு அறிவித்தார். ஆனால், அவர்களின் கோரிக் கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவில்லை. இதனால் மீண்டும் போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்தனர். இதற்காக, அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், நேற்று காலை பிரதமர் இல்லம் அருகே தமிழக விவசாயிகள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அவர்கள் அனைவரையும் கைது செய்த போலீஸார் நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
முன்னதாக அய்யாக்கண்ணு கூறும்போது, “எங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை. இதனால் மீண்டும் டெல்லியில் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்த போராட்டம் 100 நாட்களுக்கு நீடிக்கும்” என்றார்.