Breaking News
பாலியல் தளங்களை கண்டுபிடிக்க அமெரிக்க அமைப்பு உதவி

குழந்தைகளை ஆபாசமாக காட்டும் பாலியல் இணையதளங்களை முடக்குவதற்கு, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் அமைப்பின் உதவி நாடப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குழந்தைகளை ஆபாசமாக காட்டும் பாலியல் இணையதளங்களை முடக்குவது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘கடந்த ஜூன் மாதத்தில் மட்டும், குழந்தைகளை ஆபாசமாக காட்டும், 3,522 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன’ என, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், பிங்கி ஆனந்த் தெரிவித்தார்.

இதுபோன்ற இணையதளங்களை முடக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: காணாமல் போன குழந்தைகள் மற்றும் தாக்குதலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கான தேசிய அமைப்பு என்ற, அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் அமைப்பு, குழந்தைகளை ஆபாசமாக காட்டும் பாலியல் இணையதளங்கள் குறித்த தொழில்நுட்ப தகவல்களை அளித்து வருகிறது.

அமெரிக்கா உட்பட, 99 நாடுகளுக்கு, இந்த தகவல்களை இலவசமாக அளித்து வருகிறது. அதே நேரத்தில், ஒரு நாட்டின் மத்திய விசாரணை அமைப்புக்கு, மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளின் மூலமே, இந்த தகவல்கள் அளிக்கப்படுகின்றன.

இந்த அமைப்பின் உதவியை, நம் விசாரணை அமைப்பான, சி.பி.ஐ., நாடியுள்ளது. ஏற்கனவே, 2013ம் ஆண்டில் இருந்து சில தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றின் மீது முழுமையான நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இது போன்ற பல்வேறு ஆபாச இணையதளங்களில், புகைப்படங்களும், வீடியோக்களும், இந்தியாவில் இருந்து பதிவு செய்யப்படுவதாகவும் தகவல்கள் கிடைத்து உள்ளன.

அமெரிக்க அமைப்பின் மூலம், ஆபாச இணையதளங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது வேகமெடுத்து உள்ளன.சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியப் பள்ளிகளில் உள்ள கம்ப்யூட்டர்களில், இது போன்ற தளங்களை முடக்கி வைப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.