ஸ்மார்ட் கார்டு குழப்பம்: அதிகாரிகள் விளக்கம்
கோவை மாவட்டத்தில், ‘இ-சேவை’ மையங்கள் வாயிலாக வழங்கப்பட்ட, பல ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டுள்ளதால், 30 ரூபாய் செலுத்தி, கார்டுகளை பெற்றவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், ஏப்., முதல் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி துவங்கியது.தமிழகம் முழுக்க, 20 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில், 7 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 2.7 லட்சம் கார்டுகள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
ஸ்மார்ட் கார்டு வேண்டுவோர், ரேஷன் கடையில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட அவர்களது மொபைல் எண் அல்லது ரேஷன் கார்டு குறியீட்டு எண், பான் எண், ஆதார் எண் ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை, இ-சேவை மையங்களில் சமர்ப்பித்து, 30 ரூபாய் செலுத்தி, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை பெற்றனர்.
இப்படி மாநிலம் முழுக்க, 654 இ-சேவை மையங்களில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கோவையில் மட்டும், 10 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார்டுகள், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் உள்ள, ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவியில் ஸ்கேன் செய்தால், குடும்பத் தலைவரின் போட்டோக்கள் மற்றும், ‘க்யூஆர்’ கோடு ஆகியவை, ‘ஸ்கேன்’ ஆகவில்லை. அதனால், பொருட்களும் வழங்கப்படவில்லை.
ஆனால், ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட்ட, அனைத்து கார்டுகளும், ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவியில் ஸ்கேன் ஆகிறது. அந்த கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது.
அதனால், இ-சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்பட்ட, ‘ஸ்மார்ட் கார்டு’களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் மக்களும், ரேஷன் கடை பணியாளர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவையில் உள்ள, இ-சேவை மையங்களில், வினியோகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் கார்டுகளில், ‘க்யூஆர்’ கோடு சரியாக பிரின்ட் ஆகவில்லை. அதனால், ரேஷன் கடைகளில் உள்ள பாயின்ட் ஆப் சேல் கருவியில், இ-சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்பட்ட, ‘ஸ்மார்ட் கார்டு’கள் சரியாக செயல்படவில்லை. அதனால், ரேஷன் பொருள் வினியோகத்தில் குழப்பம் ஏற்பட்டது.இதுபோன்ற, ‘ஸ்மார்ட் கார்டு’களை வினியோகிக்க வேண்டாம் என, இ-சேவை மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே பணம் செலுத்தி, இ-சேவை மையங்கள் வாயிலாக, ஸ்மார்ட் கார்டு பெற்றவர்கள், பயன்படுத்த முடியாத ஸ்மார்ட் கார்டுகளை, அந்தந்த மையங்களில் சமர்ப்பித்து, புதிய கார்டுகளை பெற்றுக்கொள்ள வழி வகை செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.