தினகரன் மீதான வழக்கு: உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு
சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் டிடிவி தினகரனுக்கு எதிரான அந்நிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க விதித்த தடையை நீக்கக்கோரி அமலாக்கத் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் ரூ. 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக டெபாசிட் செய்தது, மேலும் இதே வங்கியில் டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட் மூலமாக ஐரோப்பிய நாடுகளில் ஹாப்ஸ்கிராப்ட் ஹோல்ட் என்ற பெயரில் ஹோட்டல் தொடங்குவதற்கு சட்ட விரோதமாக பணப்பரிவர்த்தனை செய்தது என டிடிவி.தினகரன் மீது 2 வழக்குகளை அமலாக்கத்துறை கடந்த 1996-ம் ஆண்டு பதிவு செய்தது. இந்த வழக்குகளின் விசாரணை கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த இரு வழக்குகளிலும் டிடிவி.தினகரன் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்துவரும் டிடிவி.தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு தடை விதித்து கடந்த ஜூலை 7-ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த தடையை நீக்கக் கோரி அமலாக்கத் துறையின் உதவி இயக்குநர் சாதிக் முகமது நயினார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 1996-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பலமுறை வாய்ப்பு வழங்கபட்டுள்ளது. ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்தான் இந்த வழக்கை எழும்பூர் நீதிமன்றம் மீண்டும் விசாரித்து வருகிறது. எனவே அந்த வழக்கு விசாரணைக்கு கடந்த ஜூலை 7-ல் பிறப்பித்த தடையை நீ்க்க வேண்டும். மேலும் வழக்கை இழுத்தடிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் டிடிவி.தினகரன் தாக்கல் செய்துள்ள மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்பு நடந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்