தென் ஆப்ரிக்கா 340 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 340 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நாட்டிங்காம் நகரில் நடைபெற்ற இந்த டெஸ்ட்டில் தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்ஸில் 96.2 ஓவர்களில் 335 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஹசிம் ஆம்லா 78, குயிண்டன் டி காக் 68, பில்லாந்தர் 54 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 51.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 78, பேர்ஸ்டோவ் 45 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்ரிக்க அணி தரப்பில் கிறிஸ் மோரிஸ், கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 130 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்ரிக்க அணி 104 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 343 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆம்லா 87, டீன் எல்கர் 80, கேப்டன் டுபிளெஸ்ஸிஸ் 63 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் மொயின் அலி 4 விக்கெட்கள் கைப்பற்றினார்.
474 ரன்கள் இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் மளமளவென விக்கெட்களை இழந்தது. ஜென்னிங்ஸ் 3, கேரி பேலன்ஸ் 4, ஜோ ரூட் 8, அலாஸ்டர் குக் 42, பேர்ஸ்டோவ் 16, மொயின் அலி 27, பென் ஸ்டோக்ஸ் 18, கிறிஸ் பிராடு 5, மார்க் வுட் 0, ஆண்டர்சன் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். முடிவில் இங்கிலாந்து அணி 44.2 ஓவர்களில் 133ரன்களுக்கு சுருண்டது. தென் ஆப்ரிக்க தரப்பில் பில்லாந்தர், கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 340 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமநிலையை அடையச் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் வரும் 27-ம் தேதி ஓவலில் தொடங்குகிறது.