இளம் வீரர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் சிறந்த களம் டிஎன்பிஎல்: முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 2-வது சீசன் போட்டிகள் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் உட்பட 8 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன.
கடந்த ஆண்டு இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஆகியோர் ஐபிஎல் தொடரில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர். இதனால் இம்முறை 2-வது சீசன் போட்டிகள் வீரர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்நிலையில் 2-வது சீசன் போட்டிகள் தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான எல்.சிவராமகிருஷ்ணன், கே.ஸ்ரீகாந்த் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன் ஆகியோர் கலந்து கொண்டு டிஎன்பிஎல் தொடர் குறித்து பல்வேறு விஷயங்களை விவாதித்தனர்.
எல்.சிவராமகிருஷ்ணன் பேசும்போது, “ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் திரும்பி இருப்பது மகிழ்ச்சியான விஷயம். டிஎன்பிஎல் தொடரில் விளையாடுபவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும். இது எனது விருப்பம். இந்திய அணிக்காக விளையாடும் வீரர்கள் இந்த தொடரில் விளையாடுவது இந்த தொடரை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. ஒரு அணி என்றால் அதில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது பெரிய பலம். இக்கட்டான சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என அவரிடம் இருந்து மற்ற வீரர்கள் கற்றுக் கொள்ள முடியும்.
மேலும் எந்த வீரர்களும் நேரடியாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவதில்லை. மாநில கிரிக்கெட் போட்டிகளில் ஒவ்வொரு கட்டத்தையும் கடந்து தான் இந்திய அணிக்குள் நுழைய முடியும். மேலும் அஸ்வின், முரளி விஜய், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் தமிழக கிரிக்கெட் சங்க போட்டிகளில் சிறப்பாக விளையாடித்தான் உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர்.
இவர்கள் மாநில கிரிக்கெட் சங்கம் நடத்தும் ஒரு தொடரில் கலந்து கொள்வதில் எந்த தவறும் இல்லை. இவர்கள் விளையாடினாலும் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஜெகதீசன், கவுசிக் காந்தி கடந்த சீசனில் பேட்டிங்கில் அபாரமாக விளையாடினார்கள். இதை போன்று அவர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது” என்றார்.
ஹைடன் கூறும்போது, “சென்னை நகருடனான எனது தொடர்பு நெருக்கமாக உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் சதம் அடித்துள்ளேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கி உள்ளேன்.
இங்குள்ள கடற்கரை, உணவு வகைகள் என அனைத்தும் என்னை கவர்ந்துள்ளது. மதுரை சுற்றுப் பயணத்தில் நான் வேஷ்டி அணிந்திருந்தேன். இது எனக்கு மிகவும் வசதியான ஆடையாக மாறிவிட்டது. இந்த ஆடையில் என்னை சமூக வலைத்தளங்களில் பார்த்த அனைவரும் பாராட்டுகின்றனர்.
டிஎன்பிஎல் தொடரில் இந்த ஆண்டு கடும் போட்டி நிலவும் என நான் எதிர்பார்க்கிறேன். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்த தொடரை நடத்துவதன் மூலம் சிறந்த பணியை மேற்கொண்டுள்ளது. கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டதால் நடராஜன் போன்ற வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு தேர்வானார்கள்.
அவருக்கு அதிக அளவில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அந்த தொடரில் அவர் அங்கம் வகித்ததே சிறப்பான விஷயம் தான் ” என்றார்.
ஸ்ரீகாந்த் கூறும்போது, “ டிஎன்பிஎல் தொடர் இந்த அளவுக்கு பிரபலம் அடைந்ததற்கு ஊடகங்கள் தான் காரணம். டிஎன்சிஏ குழுவையும், ஒளிபரப்பாளர்களையும் பாராட்ட வேண்டும்.
கிராமப்புற வீரர்களையும் உச்ச நிலைக்கு இந்த தொடர் கொண்டு சென்றுள்ளது. டிஎன்பிஎல் தொடர் சாதித்தது இதுதான். டிஎன்பிஎல் தொடர் வழியாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை வாஷிங்டன் சுந்தர் பெற்றார். அவரை முதல் ஓவரை வீசும்படி ஸ்டீவ் ஸ்மித் பந்தை கையில் கொடுக்கிறார்.
இந்த தொடர் முழுவதுமே வாஷிங்டன் சுந்தர் அற்புதமாக பந்து வீசினார். மேலும் மிகவும் சிக்கனமாகவே அவர் ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். இதபோல் தான் நடராஜனும் தனது திறனை வெளிப்படுத்திக் கொண்டார். டிஎன்பிஎல் தொடரானது வீரர்களின் திறனை வெளிக் கொண்டு வரும் களமாக அமைந்துள்ளது.
தமிழ்நாடு கிராமப்புறங்களில் கிரிக்கெட் உணர்ச்சி பூர்வமாக விளையாடப்படுகிறது. அந்த அளவுக்கு இந்த விளையாட்டு அனைத்து தரப்பினரையும் சென்றடைந்துள்ளது. தொழில்ரீதியாக நான் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகிறேன். பல்வேறு மாநிலங்களில் தமிழ் மொழி தெரியாவிட்டாலும் டிஎன்பிஎல் தொடரை ஆர்வமாக கண்டுகளித்ததை நான் பார்த்துள்ளேன்.
இந்த தொடரில் விளையாடுபவர்களை தேர்வுக்குழுவினர் மட்டும் அல்ல உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. பெயர், புகழ் அனைத்தையும் டிஎன்பிஎல் தொடர் வழங்குகிறது. இது வீரர்களுக்கு சிறந்த ஊக்கமாக அமைகிறது. கிராமப்புற வீரர்களிடமும் சிறந்த திறன் உள்ளது. இதை சரியாக வெளிக்கொண்டு வரும் வாய்ப்பை டிஎன்பிஎல் தொடர் கொடுக்கிறது. இம்முறை சிறந்த ஆல்ரவுண்டர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது ”என்றார்.