ஜெ., மரணம் குறித்த விசாரணைக்கு தயார் : அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி அறிவிப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை கமிஷன் அமைத்தால், சந்திக்க தயாராக உள்ளோம்,” என, அப்பல்லோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் ரெட்டி கூறினார்.
சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், தலைவலி, நினைவாற்றல் குறைவுக்கான சிறப்பு கிளினிக் துவக்க விழா நேற்று நடந்தது.
சிகிச்சையில் கூடுதல் கவனம்
இதில் பங்கேற்ற, பிரதாப் ரெட்டி அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முக்கியமான நபர் என்பதாலும், மக்கள் நேசிக்கும் நபராக இருந்ததாலும், அவரது சிகிச்சையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் மட்டுமின்றி, தேசிய, சர்வதேச அளவிலான நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை பலனளிக்கவில்லை.
ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், தீவிர நோய் தொற்றும், மாரடைப்பும் ஏற்படாமல்இருந்திருந்தால், ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றி இருக்க முடியும். எங்களால் இயன்ற அனைத்து சிகிச்சைகளையும் அளித்தோம். ஆனால், துரதிருஷ்டவசமாக, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்கவில்லை.
ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த, அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. விசாரணை கமிஷன் வைத்தால், சந்திக்க தயாராக உள்ளோம். சிகிச்சையில் யாருடைய தலையீடும் இல்லை. ஆனால், சிகிச்சை அளிப்பதற்கு, சில டாக்டர்களின் பெயரை பரிந்துரைத்தனர். அவர்களிடமும் ஆலோசனை பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.