Breaking News
டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களுக்கு அக்கறை இல்லையா?- வாகன் குற்றச்சாட்டு நியாயமற்றது- இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆதங்கம்

ஜோ ரூட்
இங்கிலாந்து அணி வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது மரியாதை இல்லை என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறிய குற்றச்சாட்டு நியாயமற்றது என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நாட்டிங்காமில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 340 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டெஸ்ட் வரலாற்றில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைவது இது 2-வது முறையாகும்.

இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் தேவையற்ற ஆக்ரோஷ ஷாட்கள் விளையாடி விக்கெட்களை பறிகொடுத்தனர். இதன் விளைவாக 474 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி வெறும் 133 ரன்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்து அணியின் இந்த செயல்திறனை முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் கூறும்போது, “இங்கிலாந்து அணியின் மோசமான பேட்டிங் அந்த அணியின் வீரர்களுக்கு டெஸ்ட் போட்டியின் மீது மரியாதை இல்லை என்பதை காட்டுகிறது. டி20 போட்டிகளில் விளையாடுவது போல் விளையாடுகின்றனர்” என்றார்.

இந்நிலையில் வாகனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறியதாவது:

இந்த விமர்சனங்கள் நியாயமற்றவை. மைக்கேல் வாகன் இவ்வாறு கூறினார் என்பதை நம்புவதற்கே எனக்கு கடினமாக உள்ளது. இத்தகைய தொடர்களை வெல்வதில்தான் எங்கள் பெருமை உள்ளது என்பதை அறிவோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தப் போட்டியில் மோசமாக விளையாடிவிட்டோம். நாங்கள் பேட் செய்த விதம் ஏமாற்றமளிக்கக் கூடிய வகையில் இருந்தது. ஒரு தரமான அணியாகயும், எதையும் விட்டுக் கொடுக்காத அணி என்ற மனநிலைக்கேற்பவும் நாங்கள் விளையாடவில்லை.

இந்த சூழ்நிலையில் அமைதியாக இருப்பது மிகவும் முக்கியமானது. இன்னும் இந்தத் தொடர் முடிந்து விடவில்லை. இந்தத் தோல்வியை வைத்து நம்மை நாமே தரம் தாழ்த்திக் கொள்வது நல்லதல்ல. நாம் நல்ல அணி, ஒரு தோல்வியால் அனைத்தையும் இழந்து விட மாட்டோம். இந்த ஆட்டத்தில் இருந்து விரைவாக பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். முதல் இன்னிங்ஸில் சூழ்நிலையைச் சரியாகக் கணிக்கவில்லை. அதிலிருந்து ஆட்டத்துக்குள் திரும்புவதற்கான பாதையை கண்டுபிடிக்க தவறிவிட்டோம்.

உலக கிரிக்கெட்டில் அனைத்து அணிகளும் ஒருநாள், டி20, டெஸ்ட் கிரிக்கெட் ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுவதில் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. அதிக அளவிலான ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுவது சிக்கல்தான், ஆனால் அந்தந்த வடிவங்களுக்குள் விரைவாக மாறுவது அவசியம். வேறு அணுகுமுறைக்கு மாற வேண்டும், மாறுவோம். இவ்வாறு ஜோ ரூட் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.