நடிகர் கமல் அரசியலுக்கு வருகிறாரா?: முடிவெடுத்தால் யாம் முதல்வர்!
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என கூறினார். அன்றிலிருந்து தமிழக அமைச்சர்கள் நடிகர் கமலை தொடர்ந்து விமர்சித்தும், கண்டித்தும் வருகின்றனர்.
இதனையடுத்து நடிகர் கமலுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ஓபிஎஸ் அணியினர், வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன், திருமாவளவன் போன்றோர் கமலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் கமல் தமிழக அமைச்சர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டரில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தெழுவோம் மனதளவில் உம்போல் யாம்
மன்னரில்லை
தோற்று இறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
போடா மூடா எனலாம் அது தவறு
தேடா பாதைகள் தென்படா.
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்
என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் கமல். மேலும் இந்த கவிதை புரியாதோர் நாளை அதாவது இன்று ஆங்கில பத்திரிக்கைகளில் செய்தி வரும் என கூறியுள்ளார். ஆனால் இந்த கவிதை கமல் அரசியல் சார்ந்து ஏதோ கூற வருவது போல் உள்ளதாக பேசப்படுகிறது. கமல் ஒருவேளை அதிரடியாக அரசியலுக்கு வர இருக்கிறாரோ என சந்தேகிக்கப்படுகிறது.