Breaking News
விமர்சனங்கள் எங்களுக்கு புதிது அல்ல: மனம் திறக்கும் கேப்டன் விராட் கோலி

விமர்சனங்கள் மற்றும் விமர்சிக்கப்படுவது எங்களுக்கு புதிது அல்ல. களத்துக்கு வெளியே நடைபெறும் விஷயங்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மாதம் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகினார். இதையடுத்து புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்திய அணியின் இயக்குநராக செயல்பட்ட ரவி சாஸ்திரி தற்போது அணியின் தலைமை பயிற்சியாளராக புதிய தளத்தில் பயணிக்க உள்ளார்.

இந்நிலையில் இலங்கை சுற்றுப்பயணத்துக்காக இந்திய அணி நேற்று மும்பையில் இருந்து புறப்பட்டு சென்றது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி, ஒரு டி20 ஆட்டம் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ம் தேதி காலே நகரில் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இரு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

இலங்கை புறப்படுவதற்கு முன்னதாக கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:

துணை பயிற்சியாளர்கள் நியமன விஷயத்தில் நான் திசைதிருப்பப்படவில்லை. இதனால் கூடுதல் அழுத்தம் சேர்ந்துள்ளதாகவும் நான் கருதவில்லை. என்ன நடைபெற வேண்டுமோ அது நடைபெற்றுள்ளது. விமர்சனங்கள் மற்றும் விமர்சிக்கப்படுவது எங்களுக்கு புதிது அல்ல. களத்துக்கு வெளியே நடைபெறும் விஷயங்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை.

எந்தவித கூடுதல் அழுத்தத்தையும் நான் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு வீரராக நடைபெற உள்ள தொடரில் கவனம் செலுத்துவன். எனது கையில் மட்டையை மட்டுமே நான் பெற்றுள்ளேன். எனது கையில் என்ன கொடுக்கப்பட்டுள்ளதோ அதைக் கொண்டு சிறப்பாக விளையாடுவதில்தான் கவனம் செலுத்துவேன். ஊகங்கள் எழுவது எங்களது கட்டுப்பாட்டில் இல்லை.

களத்தில் சிறந்த திறனை வெளிப்படுத்துவதும் அணியை சிறப்பாக செயல்பட வைப்பதுதான் எனது பணி. ரவி சாஸ்திரியுடன் ஏற்கெனவே நாங்கள் இணைந்து பணியாற்றி உள்ளோம். இதனால் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கு அதிக முயற்சிகளை எடுத்துக் கொள்ள தேவை இல்லை என்றே கருதுகிறேன்.

இவ்வாறு விராட் கோலி கூறினார்.

கடந்த 2015-ம் ஆண்டு முதன்முறையாக விராட் கோலி தலைமையிலான இளம் இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த போதும் அடுத்த இரு டெஸ்ட்டிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி சாதனை படைத்திருந்தது. இதனை நினைவு கூர்ந்த கோலி, “அந்த சுற்றுப்பயணம் எங்களுக்கு மைல் கல்லாக இருந்தது. அந்த தொடர்தான் வெளிநாட்டு மைதானங்களில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தது.

மேலும் உள்நாட்டில் மட்டும் அல்ல வெளியிடங்களிலும் வெற்றி பெற முடியும் என்ற கலாச்சாரத்தை உருவாக்கியது. கடினமான தருணங்களில் இருந்து போராடி வெற்றி பெற முடியும் அதற்கான திறன் நம்மிடம் இருக்கிறது என்பதையும் காட்டியிருந்தோம்” என்றார்.

ரவி சாஸ்திரி கூறும்போது, “எந்த இடத்தில் விட்டுச் சென்றேனோ அங்கிருந்தே அணியை எடுத்துச் செல்கிறேன். ரவி சாஸ்திரியோ, அனில் கும்ப்ளேவோ வரலாம், செல்லலாம். ஆனால் இந்திய கிரிக்கெட் அப்படியே தான் இருக்கும். நான் எதையும் எடுத்துவரவில்லை. இந்திய அணி கடந்த 3 வருடங்களாகவே சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அணி நம்பர் ஒன் இடத்தில் இருப்பதற்கு உரிய பாராட்டுக்கள் வீரர்களையே சேரும்.

ஒரு வீரர் விளையாடும் போது மனதை தெளிவாக வைத்திருக்க வேண்டும். எந்தவித கவனச் சிதறல்களும் இருக்கக்கூடாது, அதற்கு உதவி செய்ய சிறந்த துணை பயிற்சியாளர்கள் இருக்க வேண்டும். அதைத்தான் நான் செய்துள்ளேன்.

வீரர்கள் தங்களது பாத்திரங்களை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதையே விரும்புகிறேன். பாரத் அருண் 15 ஆண்டுகளாக பயிற்சியாளராக உள்ளார். அணியில் உள்ள வீரர்களை என்னை விட அவர் நன்கு அறிந்துவைத்துள்ளார். அருணின் பலம் அனைவருக்குமே தெரியும்” என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.