ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் வீரர்களிடம் 100 சதவீத திறனை எதிர்பார்க்கிறேன்:சென்னையின் எப்சி பயிற்சியாளர் ஜான் கிரகோரி கருத்து
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கலந்து கொள்ளும் சென்னையின் எப்சி அணி வீரர்களிடம் 100 சதவீத திறனை எதிர்பார்ப்பதாக புதிய பயிற்சியாளர் ஜான் கிரகோரி தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 4-வது சீசன் போட்டிகள் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளன. இந்த தொடரில் பங்கேற்கும் சென்னையின் எப்சி அணியின் பயிற்சியாளராக சமீபத்தில் இங்கிலாந்தை சேர்ந்த 63 வயதான ஜான் கிரகோரி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் அணியின் இணை உரிமையாளர்களான அபிஷேக் பச்சன், விடா தானி மற்றும் துணை பயிற்சியாளர் ஷபிர் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஜான் கிரகோரி பேசும்போது, “ஐஎஸ்எல் தொடரில் விளையாடும் இந்திய வீரர்களிடம் வெளிநாட்டு வீரர்களைவிட சிறந்த திறன் உள்ளது. ஆனால் திறமையை நிரூபிக்க அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைப்பது இல்லை. வெளிநாட்டு வீரர்களா, இந்திய வீரர்களா என வரும் போது வெளிநாட்டு வீரர்களே தேர்வு செய்யப்படுகிறார்கள். தற்போது விளையாடும் லெவனில் 5 வெளிநாட்டு வீரர்களே இருக்க வேண்டும் என புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளது என்னை மிகவும் ஈர்த்துள்ளது. இது ஒரு நல்ல முன்னேற்றம். தேசிய அணியை மேம்படுத்தவும் இது உதவும்.
குறுகிய காலத்திலேயே ஐஎஸ்எல் தொடர் வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது. 3 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த தொடர் தற்போது உலகம் முழுவதும் விரும்பப்படுகிறது. மார்க்கோ மெட்டராஸியின் அடிச்சுவடுகளை தொடர்ந்து இந்த கிளப்பில் நான் இணைந்துள்ளேன். இந்த அணிக்கு அவர் வியக்கத்தக்க பணிகளை செய்துள்ளார். மெட்டராஸி விட்டுச் சென்ற பணிகளை தொடருவேன். இந்த அணியை கொண்டு வெற்றிகளை பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
சென்னை அணியின் சீருடையை அணியும் வீரர் 100 சதவீத திறனை வெளிப்படுத்த வேண்டும். முழுமையாக அவர்கள் தங்களை அணியில் ஈடுபத்திக் கொள்ள வேண்டும். அதுபோன்ற வீரர்களுக்கு நான் முழு அளவில் ஆதரவு அளிப்பேன். மைதானத்தில் வீரர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ளவேண்டும். நடுவர்கள், எதிரணி வீரர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளக்கூடாது” என்றார்.