டிஎன்பிஎல் கிரிக்கெட் இன்று தொடங்குகிறது
டிஎன்பிஎல் தொடரின் 2-வது சீசன் போட்டிகள் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் மோதுகிறது. தொடக்க விழாவில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் தோனி கலந்து கொள்கிறார்.
ஐபிஎல் பாணியில் கடந்த ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் தூத்துக்குடி ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் டிஎன்பிஎல் 2-வது சீசன் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. சென்னை, திண்டுக்கல், திருநெல்வேயில் நடைபெறும் இந்த தொடர் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தினேஷ் கார்த்திக் தலைமையிலான ஆல்பர்ட் டூட்டி பேட்ரி யாட்ஸ், அஸ்வின் வெங்கடராமன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் மோதுகிறது.
இம்முறை ஐபிஎல் பாணியில் பிளே ஆப் சுற்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். லீக் சுற்றுகளின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
லீக் சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் தகுதிச் சுற்று 1-ல் மோதும். இந்த ஆட்டம் ஆகஸ்ட் 15-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடை பெறும். 3 மற்றும் 4-வது இடத்தைப் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் சுற்றில் ஆகஸ்ட் 16-ம் தேதி திண்டுக்கலில் மோதுகின்றன. ஆகஸ்ட் 18-ம் தேதி தகுதிச் சுற்று-2 திருநெல்வேலியில் நடைபெறுகிறது. இதில் தகுதிச் சுற்றில் 1-ல் தோல்வியடைந்த அணியும், எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியும் மோதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டதால் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ஆகியோர் ஐபிஎல் தொடரில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர். இதனால் இம்முறை 2-வது சீசன் போட்டிகள் வீரர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.
தொடக்க விழாவில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான மகேந்திரசிங் தோனி, மோஹித் சர்மா, பத்ரிநாத், பவன் நெகி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், தமிழக பேட்ஸ்மேன் அனிருத்தா ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவர்களுடன் எல்.பாலாஜி, முரளி விஜய், தமிழக ஆல்ரவுண்டர் சி.கணபதி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மாலை 6 மணி முதல் 7 மணி வரை தோனி உள்ளிட்ட வீரர்கள் சிக்ஸர்கள் விளாசும் போட்டியில் கலந்துகொள்கின்றனர். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை முடிவுக்கு வந்த நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.