‘சிரியாவை விட இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் அதிகம்’
கடந்தாண்டு, உலகெங்கும் நடந்துள்ள, பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிரியாவை விட, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் அதிகம் நடந்துள்ளது’ என, குறிப்பிட்டுள்ளது.
கடந்தாண்டில், உலகெங்கும் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும், அதை தடுக்க, அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது; அதில் கூறியுள்ளதாவது:
கடந்த, 2016ல், உலகெங்கும் பயங்கரவாத தாக்குதல், முந்தைய ஆண்டைவிட, 9 சதவீதம் குறைந்துள்ளது. தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும், 13 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில், பயங்கரவாத தாக்குதல், 16 சதவீதமும், உயிரிழப்பு, 17 சதவீதமும் உயர்ந்துள்ளது.
அதிக அளவு பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ள நாடுகளில், ஈராக், ஆப்கானிஸ்தானை அடுத்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது; இதற்கு முக்கிய காரணம், இந்தியாவில், 52 வகையானபயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. அதிக அளவு தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்புகளில், ஐ.எஸ்., மற்றும் தலிபான் முதலிரண்டு இடங்களில் உள்ளன.
மூன்றாவது இடத்தில், நக்சலைட்கள் உள்ளனர். அதே நேரத்தில், தாக்குதல்களில் உயிரிழப்பு ஏற்படுவது, மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைவு. சர்வதேச அளவில், ஒரு தாக்குதலில், 2.4 பேர் உயிரிழந்தனர். இது இந்தியாவில் 0.4 பேராக உள்ளது.