காவிரியில் கழிவுநீர் கலப்பு விவகாரம் : ஆய்வு செய்ய தமிழக – கர்நாடக – மத்திய அரசு அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழு அமைப்பு
காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழகம் மற்றும் கர்நாடகம் – மத்திய அரசை சேர்ந்த மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் இந்த கூட்டுக்குழு தனது ஆய்வை துவக்க உள்ளது. கர்நாடகத்தின் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு பல கிலோ மீட்டர் தூரம் தாண்டி தமிழகத்திற்கு வருகிறது. தமிழகத்திற்கு வரும் வழியில் இந்த ஆற்றில், பல்வேறு வகையான கழிவுப் பொருட்கள் கலக்கப்படுவதாக தமிழகம் புகார் தெரிவித்தது. ஆனால் கர்நாடக அரசோ இதை தடுக்க எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. காவிரி ஆற்றில் கலந்து வரும் மொத்த கழிவுகளில் சுமார் 15 – 20 சதவீதம் மட்டுமே கர்நாடக அரசால் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் பல அபாயகரமான கழிவுகளோடுதான் காவிரி நீர் தமிழகத்தை வந்து சேருகிறது.
இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், அபாயகரமான கழிவுகளோடு வரும் காவிரி தண்ணீரில் விளையும் பயிர்களில் வேதிப்பொருட்கள் அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது கூறியுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் வளரும் மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பாதிக்கப்படும்தமிழக விவசாயிகளுக்கு கர்நாடக அரசு ரூ.2 ஆயிரத்து 400 கோடி இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும் கோரியது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரியில் கழிவு நீர் கலப்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து காவிரி ஆற்றில் கலக்கும் கழிவு நீர் குறித்து ஆய்வு செய்ய தமிழகம் – கர்நாடகம் – மத்திய அரசு இணைந்து கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த கூட்டுக் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு வரும் ஆகஸ்ட் 15 முதல் தனது ஆய்வை தொடங்க உள்ளது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பரத்வாஜ் தலைமையில் இந்த கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.