சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படாது: மத்திய அரசு விளக்கம்
வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. (டெல்லியில் தற்போது மானியம் நீங்கலாக ஒரு சிலிண்டரின் விலை 477 ரூபாய் 46 காசுகள் ஆகும்).ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ளலாம். அதற்கு மேல் தேவைப்படும் சிலிண்டர்களை சந்தை விலை கொடுத்து தான் வாங்க வேண்டும்.
அதாவது கூடுதலாக வாங்கும் சிலிண்டர்களுக்கு மானியம் கிடையாது. ஒரு சிலிண்டருக்கு தற்போது 84 ரூபாய் 54 காசு மானியமாக வழங்கப்படுகிறது. மானியம் போக சென்னையில் தற்போது ஒரு சிலிண்டரின் விலை 574 ரூபாய் 70 காசு ஆகும். இந்த நிலையில், சிலிண்டருக்கான மானியம் வரும் ஆண்டு மார்ச் முதல் ரத்து செய்யப்பட உள்ளதாக நேற்று தகவல் வெளியானது. மேலும், மாதம் தோறும் ரூ. 4 வரை சிலிண்டர் விலையை உயர்த்தவும் எண்ணைய் நிறுவனங்களுக்கு அனுமதியை மத்திய அரசு வழங்கியிருப்பதாக கூறப்பட்டது. இது நாடு முழுவதும் மானிய விலையில் சிலிண்டர் பெறும் ஏழை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. மாநிலங்களவையில், எதிர்க்கட்சிகள் சிலிண்டர் மானியம் ரத்து என்ற முடிவுக்கு எதிராக கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாநிலங்களவையில் விளக்கம் அளித்த மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சிலிண்டர் மானியம் முறைப்படுத்தப்படும் எனவும் மானியம் ரத்து செய்யப்படாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து தர்மேந்திர பிரதான் மேலும் கூறும் போது, “ சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படாது. சிலிண்டர் மானியம் முறைப்படுத்தப்படும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி தேவையற்றது” என்றார்.