டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல்-கோவை ஆட்டம் மழையால் ரத்து
இந்த நிலையில் திண்டுக்கல் டிராகன்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதும் 11-வது ஆட்டம் நேற்று நத்தத்தில் நடக்க இருந்தது. அந்த ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்க இருந்த நிலையில், மாலை 6.15 மணிக்கு திடீரென மழை கொட்டியது. டாஸ் போடுவதற்கு முன்பே மழை குறுக்கிட்டதால், ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
மழை நின்று ஆட்டம் தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 2½ மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் மழை தொடர்ந்தது. இந்த கன மழையால் ஆடுகளத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. 9 மணிக்கு பிறகு மழையின் வேகம் குறைந்து லேசான தூரல் விழுந்தது.
இரவு 9.30 மணி அளவில் நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்தனர். அதில் உடனடியாக போட்டி தொடங்குவதற்கு ஏதுவான நிலையில் ஆடுகளம் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் திண்டுக்கல் டிராகன்சும், கோவை கிங்சும் மோத இருந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆட்டம் ரத்தானதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் மழையால் ஆட்டம் ரத்தாகி இருப்பது இதுவே முதல் முறையாகும். ஆட்டம் ரத்தானதால் மைதானத்துக்கு வந்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.