வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ. 2,350 கோடி வெள்ள நிவாரணம்: பிரதமர் மோடி
வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வு நடத்த பிரதமர் மோடி இன்று அசாம் மாநிலம் கவுகாத்தி வந்தார்.
கவுகாத்தி வந்த மோடியை, அசாம் கவர்னர், முதல் மந்திரி ஆகியோர் வரவேற்றனர்.
இதையடுத்து அசாம் நிர்வாக அலுவலர் கல்லூரிக்கு சென்ற பிரதமர் மோடி, வடகிழக்கு மாநிலங்களின் ஏற்பட்ட வெள்ள நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், அசாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் முதல் மந்திரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு உடனடி நிவாரண தொகையாக வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ. 2,350 கோடி நிதியை பிரதமர் அறிவித்தார். மேலும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.