காஷ்மீரில் லஷ்கர் இ-தொய்பா தலைமை தளபதி உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீர் மாநிலம் புல்வாமா நகரையொட்டிய ஹக்கார்போராநெவா என்ற கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை அந்த கிராமத்துக்கு உள்ளூர் போலீசார், பாதுகாப்பு படை வீரர்கள், அதிரடிப் படையினர் விரைந்தனர்.
பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு அவர்களை சரண் அடையும்படி எச்சரித்தனர். அதற்கு மறுத்த பயங்கரவாதிகள் உடனடியாக அந்த வீட்டுக்குள் இருந்தவாறே எந்திர துப்பாக்கிகளால் சரமாரியாக சுடத் தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் இதற்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே சில மணி நேரம் கடும் துப்பாக்கி சண்டை நீடித்தது. இறுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீடு முற்றிலுமாக இடிந்து விழுந்தது.
இந்த சண்டையில் லஷ்கர் இ-தொய்பா இயக்கத்தின் தலைமை தளபதி அபு துஜானாவும் மற்றொரு பயங்கரவாதியும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீடு அடியோடு தரைமட்டமாகி விட்டதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இடிபாடுகளை அகற்றும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
பயங்கரவாதிகள் அதிக அளவில் கையெறி குண்டுகளையோ, வெடிபொருட்களையோ அந்த வீட்டுக்குள் பதுக்கி வைத்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளதால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களை மீட்பது மெதுவாக நடந்து வருகிறது. அந்த பகுதியில் ஏராளமான வெடிபொருட்களும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
இதுபற்றி மாநில போலீஸ் டி.ஜி.பி. வைத் கூறுகையில், “கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல்களை கைப்பற்றும்வரை பலியானவர்களில் ஒருவர் லஷ்கர் இ-தொய்பா இயக்கத்தின் தலைமை தளபதி அபு துஜானா என்பவர்தானா என்பதையும், இரண்டுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனரா? என்பதையும் என்னால் உறுதியாக கூற இயலாது” என்றார்.
இந்த நிலையில் லஷ்கர் இ-தொய்பா தளபதி அபு துஜானா கொல்லப்பட்ட தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதனால் புல்வாமா மாவட்டத்தில் பல இடங்களில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. சில இடங்களில் வன்முறையும் வெடித்தது.
குறிப்பாக ஹக்கார்போராநெவா கிராமத்தில் துப்பாக்கி சண்டை நடந்த இடத்தின் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படைவீரர்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி அவர்களை விரட்டி அடித்தனர். ரவை குண்டு துப்பாக்கி சூடும் நடத்தினர்.
நிலைமை கட்டுக்கு அடங்காமல் போகவே, சில சுற்றுகள் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. இதில் பிர்தவுஸ் அகமது என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் வழியிலேயே அவர் உயிர் இழந்தார்.
இந்த சம்பவங்கள் காரணமாக புல்வாமா மாவட்டத்திலும் தெற்கு காஷ்மீரின் பிற பகுதிகளிலும் வன்முறை பரவியது. இதனால் தெற்கு காஷ்மீரில் நேற்று அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இணையதளம், செல்போன் சேவைகள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீநகரில் இருந்து பனிஹால் வழியாக தெற்கு காஷ்மீர் பகுதிக்கு செல்லும் அனைத்து ரெயில்களின் சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி அபு துஜானா, பாகிஸ்தானை சேர்ந்தவர் ஆவார். காஷ்மீரில் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவர், பாதுகாப்பு படையினரால் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.