சமையல் கியாஸ் விலை ரூ.2.31 உயர்வு
சமையல் கியாஸ் விலை, சிலிண்டருக்கு ரூ.2.31 உயர்த்தப்பட்டது.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்கு மேல் தேவைப்படுபவர்கள், மானியம் இல்லாமல், சந்தை விலைக்கு சிலிண்டர்களை வாங்க வேண்டும். டெல்லியில், மானியம் இல்லா சமையல் கியாஸ் விலை ரூ.564-ல் இருந்து ரூ.524 ஆக குறைந்துள்ளது. மானிய சமையல் கியாஸ் விலை, ரூ.477.46 ஆக உள்ளது.
சமையல் கியாஸ் விலையை மாதந்தோறும் 1-ந் தேதியன்று, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
இதற்கிடையே, மானிய சமையல் கியாஸ் விலையை மாதந்தோறும் 4 ரூபாய் உயர்த்துமாறு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டிருப்பதாக பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் சமையல் கியாசுக்கு மானியம் வழங்குவது முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
ரூ.2.31 உயர்வு
இதன் அடிப்படையில், நேற்று மானிய சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.2.31 உயர்த்தப்பட்டது.
டெல்லியில், ரூ.477.46 ஆக இருந்த மானிய சமையல் கியாஸ் விலை, ரூ.479.77 ஆக உயர்ந்தது.
மாதந்தோறும் சமையல் கியாஸ் விலையை 4 ரூபாய் உயர்த்துமாறு கடந்த மே 30-ந் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்பிறகு, கியாஸ் விலை உயர்த்தப்படுவது, இது 3-வது முறை ஆகும்.
இதற்கு முன்பு, கடைசியாக கடந்த ஜூலை 1-ந் தேதி, கியாஸ் விலை அதிரடியாக 32 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதற்கு மத்திய அரசு உத்தரவு மட்டுமின்றி, ஜி.எஸ்.டி. வரி அமலாக்கமும் காரணமாக கூறப்பட்டது.
விமான எரிபொருள் விலை உயர்வு
சமையல் கியாஸ் விலையை உயர்த்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், விமான எரிபொருள் விலையையும் நேற்று உயர்த்தின. ரூ.47 ஆயிரத்து 13 ஆக இருந்த ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை, ரூ.48 ஆயிரத்து 110 ஆக உயர்த்தப்பட்டது.