டெல்லி மேல்-சபை எம்.பி. தேர்தலில் ‘நோட்டா’ இடம்பெறும் தேர்தல் கமிஷன் அறிவிப்பு
டெல்லி மேல்-சபைக்கு குஜராத் மாநிலத்தில் இருந்து 3 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 8-ந் தேதி நடக்கிறது. இந்த 3 இடங்களுக்கு பா.ஜனதா தரப்பில் அதன் தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளரான அகமது பட்டேலும் போட்டியிடுகின்றனர். 3 இடத்துக்கு 4 பேர் போட்டியிடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அகமது பட்டேலை தோற்கடிக்கும் நோக்குடன் 3-வது வேட்பாளரை பா.ஜனதா நிறுத்தி இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதனால் தனது கட்சியின் 44 எம்.எல்.ஏ.க்களை பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசுவிடுதியில் பாதுகாப்பாக தங்க வைத்தும் இருக்கிறது.
மேல்-சபையில் அமளி
இந்த நிலையில் டெல்லி மேல்-சபைக்கான எம்.பி. தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்கும் ‘நோட்டா’ ஓட்டுச்சீட்டில் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியானது. நோட்டா இடம்பெற்றால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பலர் அகமது பட்டேலுக்கு ஓட்டுப்போடாமல் நோட்டாவுக்கு தங்களுடைய வாக்கை செலுத்தும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு நேற்று டெல்லி மேல்-சபையில் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிக்கும் விதமாகவே நோட்டா சேர்க்கப்பட்டு உள்ளதாக கூறி எதிர்க்கட்சிகள் கடும் அமளியிலும் ஈடுபட்டன. இதனால் சபையின் நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் கோரிக்கை
மேலும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆனந்த் சர்மா, மணிஷ் திவாரி ஆகியோர் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து, குஜராத் சட்டசபையில் வருகிற 8-ந் தேதி நடைபெறும் டெல்லி மேல்-சபை எம்.பி. தேர்தலுக்கான வாக்குச்சீட்டில் இருந்து நோட்டாவை அகற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அப்போது, இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாகவும், அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு முரண்பாடாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
‘நோட்டா’ இடம் பெறும்
இதைத் தொடர்ந்து தேர்தல் கமிஷன் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. அதில், ‘டெல்லி மேல்-சபை எம்.பி. தேர்தலுக்கான ஓட்டுச்சீட்டில் நோட்டா இடம் பெறுவது தொடர்பாக சந்தேகம் எழுப்பப்பட்டு இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு 2013-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மேல்-சபை எம்.பி. தேர்தலிலும் நோட்டா சேர்க்கப்பட்டு உள்ளது. இது தற்போதைய தேர்தலில் மட்டுமின்றி இனிவரும் அனைத்து டெல்லி மேல்-சபை எம்.பி. தேர்தல்களுக்கும் பொருந்தும். இந்த பகுதி (நோட்டா) இடம்பெறுவதை அனைத்து தேர்தல் அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
தேர்தல் கமிஷன் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், “டெல்லி மேல்-சபையில் எம்.பி. தேர்தலில் நோட்டா கட்டாயம் இடம்பெற வேண்டும் என 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டெல்லி மேல்-சபைக்கு எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தேர்தல்களில் நோட்டா பகுதியும் இணைக்கப்பட்டு வருகிறது” என்றனர்.